இந்தியாவில் பல வருடங்களாக பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக வளர்ந்து வருகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுகின்றனர் என கருத்து நிலவி வருகிறது. இதேபோல் கடந்த 10 வருடத்தில் நாட்டின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் 1 சதவீத மக்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது உறுதியானது.
இதேவேளையில் இந்தியாவில் முக்கியமான சில மாற்றமும் நடந்துள்ளது, ஆம் நாட்டின் வறுமை அளவு குறைந்துள்ளதாகக் கள ஆய்வுகள் கூறுகிறது.

உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று காலத்தில் உருவான சவால்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் வறுமை 2011-12 ஆம் ஆண்டில் இருந்த 21.2 சதவீதத்திலிருந்து 2022-24 ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான NCAER வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
NCAER நிறுவனத்தைச் சேர்ந்த சோனால்டே தேசாய் என்பவர் 'Rethinking Social Safety Nets in a Changing Society' என்ற தலைப்பில் எழுதிய இந்த ஆய்வுக் கட்டுரைக்கு இந்திய மனித மேம்பாட்டு ஆய்வின் (India Human Development Survey - IHDS) 3 கொரோனா அலைகளின் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2004-2005 ஆம் ஆண்டிலிருந்து 2011-12 ஆம் ஆண்டு வரையில் நாட்டின் வறுமை 38.6 சதவீதத்திலிருந்து 21.2 சதவீதமாகக் குறைந்ததுள்ளது. அதேபோல், கொரோனா பெருந்தொற்று தந்த சவால்களுக்கு மத்தியிலும், 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 2022-24 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நாட்டின் வறுமை 21.2 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று இந்திய மனித மேம்பாட்டு ஆய்வின் தரவுகளை வைத்து இந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பொருளாதார வளர்ச்சி இருக்கும் இதே வேளையில் வறுமை குறைவடையும் போது, நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றன. இந்த சூழ்நிலையில் நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நெகிழ்வுத்தன்மை மிக்க சமூக பாதுகாப்பு திட்டங்கள் தேவைப்படுகின்றன என்றும் இந்த ஆய்வுக் கட்டுரை வலியுறுத்துகிறது.
பொருளாதார வளர்ச்சி காலத்தில், வாய்ப்புகள் அதிகரிக்கும்போது, பிறப்பு சார்ந்த நீண்டகால வறுமை உருவாக்கும் காரணிகளும் குறையக்கூடும். இதற்கு மாறாக, இயற்கை பேரிடர்கள், நோய், இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் தொழில் சார்ந்த வாய்ப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை வறுமைக்கு முக்கிய காரணங்களாக மாறக்கூடும் என்று இந்த ஆய்வுக் கட்டுரை கருத்து தெரிவிக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், NITI ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி BV R சுப்பிரமணியம், சமீபத்திய நுகர்வோர் செலவின கணக்கெடுப்பைப் பார்க்கும் போது, நாட்டில் வறுமை 5 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மக்களின் செல்வம் அதிகரித்து வருவதாகக் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications