மக்களின் நலனுக்காக அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்படும் திட்டங்களில் ஏராளமானோர் முதலீடு செய்து கொண்டிருப்பீர்கள். தவறாமல் பணத்தை வரவு வைத்தால் மட்டும் போதாது. ஒரு சில திட்டங்களின் பலன்களை முழுமையாக பெற குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்தத் திட்டத்தின் முழுப் பலனும் கிடைக்கும். இந்தப் பதிவில் PPF திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் எதன் அடிப்படையில் பணத்தை வரவு வைக்க வேண்டும்?, எப்போது வரவு வைத்தால் முழுமையான வட்டி கிடைக்கும்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.
பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் ஒரு சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் மாதா மாதம் வரவு வைக்கலாம் அல்லது ஒவ்வொரு வருடமும் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தின் 5-ஆம் தேதி தொடங்கி கடைசி தேதி வரை அக்கவுண்டில் இருக்கும் குறைந்தபட்ச பேலன்ஸின் அடிப்படையில் தான் வட்டி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக செப்டம்பர் 1-ஆம் தேதி உங்கள் கணக்கில் ரூ.50,000 இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். செப்டம்பர் 4-ஆம் தேதி அன்று நீங்கள் கூடுதலாக ரூ.20,000-த்தை டெபாசிட் செய்கிறீர்கள். இதனால் செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பேலன்ஸ் ரூ.70,000-ஆக இருக்கும்.

செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில் நீங்கள் பணம் எடுக்கவும் இல்லை.. டெபாசிட் செய்யவும் இல்லை என்றால் செப்டம்பர் 5 தொடங்கி செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் உங்களுடைய குறைந்தபட்ச பாலன்ஸ் ரூ.70,000. அந்த மாதத்தில் உங்கள் கணக்கில் இருக்கும் ரூ.70,000-த்திற்கும் வட்டி கணக்கிடப்படும்.
அதுவே செப்டம்பர் 5-ஆம் தேதி வரை உங்கள் அக்கவுண்டில் ரூ.50,000-த்தை வைத்திருக்கிறீர்கள். அதன் பிறகு செப்டம்பர் 10-ஆம் தேதி அன்று கூடுதலாக 10,000 ரூபாயை வரவு வைக்கிறீர்கள். செப்டம்பர் 30-ஆம் தேதி உங்கள் அக்கவுண்டில் ரூ.60,000 இருக்கிறது என்றாலும் வட்டி செப்டம்பர் 5-ஆம் தேதி இருந்த ரூ.50,000-த்திற்கு மட்டுமே வழங்கப்படும். அதாவது அக்கவுண்டில் இருக்கும் குறைந்தபட்ச பாலன்ஸ் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மீதமுள்ள ரூ.10,000-த்திற்கான வட்டி அக்டோபர் மாதத்தின் பேலன்ஸ் அடிப்படையில் சேர்த்து வழங்கப்படும்.
பிபிஎஃப் திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ரூ.500 தொடங்கி ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். நீங்கள் ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டுமானால் அதற்கு ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்து விடுங்கள். அப்போதுதான் அந்த நிதியாண்டு முழுவதற்கும் உங்களுக்கு வட்டி கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் டெபொசிட் செய்பவர்கள் அந்த மாதத்தின் 5-ஆம் தேதிக்குள் பணத்தை வரவு வைத்தால் அடுத்தடுத்த மாதங்களில் சரியாக வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒரே அடியாக அதிகபட்ச தொகையான ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்வது சிரமமாக இருக்கும். எனவே நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் ரூ.12,500 என்ற தொகையை முதலீடு செய்தால் 12 மாதங்கள் கழித்து ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள். 15 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.22.5 லட்சம் சேமிக்கப்பட்டிருக்கும். இதற்கு வட்டியாக ரூ.18,18,209 கிடைக்கும். 15 ஆண்டுகள் லாக்கின் காலம் முடிந்து ரூ.40,68,209 லட்சத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
