இந்திய போஸ்ட் ஆபீஸ்களில் நிறைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு திட்டங்கள் மக்களிடையே பிரபலமான திட்டங்கள் ஆகும்/ ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற PPF திட்டம். மற்றொன்று சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம். இந்த இரண்டு திட்டங்களுமே நீண்டகால முதலீட்டு திட்டங்கள். ஏனெனில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள், PPF திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள்.
முதலீட்டு வரம்புகள் மற்றும் கால அளவு ஆகியவற்றில் சில ஒற்றுமை இருந்தாலும் நிறைய வேறுபாடும் இருக்கிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் என்பது முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட திட்டம். ஆனால் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த பதிவில் இரண்டு திட்டங்களிலும் ரூ.1,50,000 முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதைப் பார்ப்போம்.

PPF அல்லது SSY திட்டங்களில் முதலீடு செய்ய இந்தியா முழுவதும் உள்ள எந்த தபால் அலுவலகத்தில் எதற்கு வேண்டுமானாலும் செல்லலாம். வங்கிகளிலும் இந்த இரண்டு திட்டங்கள் வழங்கப்படுகிறது.
பொது வருங்கால வைப்பு நிதி: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச முதலீடாக 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடு ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம். அதற்கு மேல் முதலீடு செய்ய முடியாது. பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வுக் காலம் முன்பே சொன்னது போல் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
சுகன்ய சம்ரித்தி யோஜனா: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக 250 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடாக ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 21 ஆண்டுகள். ஆனால் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்தால் போதுமானது. அதன் பிறகு மீதி இருக்கும் 6 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யாமலேயே கூட்டு வட்டியின் மூலம் வட்டி வருமானம் வழங்கப்படும். 21 ஆண்டுகள் கழித்து பணத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளலாம். தற்போது SSY திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஒரு நிதியாண்டுக்கு ரூ.1,50,000 ரூபாய் மொத்தமாக முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 15 ஆண்டுகளுக்கு 22,50,000 ரூபாயை மொத்தமாக முதலீடு செய்திருப்பீர்கள். இந்த ஒட்டுமொத்த முதலீடு காலத்திற்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டால் வட்டி வருமானமாக 18,18,209 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 48,68,209 ரூபாயாக இருக்கும்.
சுகன்ய சம்ரித்தி யோஜனா திட்டத்தில் ஒரு நிதியாண்டுக்கு ரூ.1,50,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஒட்டு மொத்த முதலீட்டு காலத்திற்கும் அதாவது 15 ஆண்டுகளுக்கு 22,50,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். உங்கள் மொத்த முதலீட்டுக்கும் 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டால் வட்டி வருமானமாக 46,77,578 ரூபாய் கிடைக்கும். இதில் 15 ஆண்டு காலத்திற்கு மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள ஆறு ஆண்டுகளுக்கு வட்டி வருமானம் வழங்கப்படும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகையாக ரூ.69,27,578 கிடைக்கும்.
ஒப்பீட்டளவில் பார்க்கும் போது சுகன்ய சம்ரித்தி யோஜனா திட்டம் அதிக வருமானத்தை வழங்குகிறது. ஆனாலும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்துடன் ஒப்பிடுகையில் அதிக வருமானம் பெற 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications