டெல்லி: இந்தியாவில் நேரடியாக விற்பனை நிலையங்களை அமைக்கும் முடிவு ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரிய அளவில் வருமானத்தை ஈட்டி தந்து இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன் மற்றும் ஐபேட், மேக் உள்ளிட்டவற்றை இந்தியாவில் ஈ காமர்ஸ் தளங்கள் மற்றும் பிற விற்பனை நிலையங்கள் மூலமே விற்பனை செய்து வந்தது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய நேரடி விற்பனை நிலையத்தை அமைப்பது என முடிவு செய்தது. இதன்படி மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் தலா ஒரு நேரடி விற்பனை நிலையத்தை ஆப்பிள் நிறுவனம் அமைத்தது.
இந்த ஓராண்டு காலத்தில் இந்த இரண்டு கடைகளும் ஆப்பிள் நிறுவனத்திற்கு 600 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி தந்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் இந்தியாவில் மற்ற தளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் நேரடியாக கடைக்கு வந்து தங்களுடைய பொருட்களை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்தியாவை சேர்ந்த ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரிகள் கூறுகின்றனர். எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைத்திருப்பதாகவும் கூடிய விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கூடுதலாக நான்கு விற்பனை நிலையங்களை திறக்கப் போகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் பெங்களூரு ,டெல்லி என்சிஆர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் நகரங்களிலும் மும்பையில் கூடுதலாக ஒரு விற்பனை நிலையத்தையும் திறக்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்தியாவிலேயே ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. எனவே இந்தியாவில் இந்த நிறுவனத்தின் போன்கள் மற்றும் பிற பொருட்களின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது.
அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் 65,000 கோடி ரூபாய்க்கு தனது போன்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்துள்ளதாகவும் ஓராண்டு கால அளவில் ஒப்பிடும்போது இது 33 சதவீதம் அதிகம் என்றும் தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையங்களில் 60 சதவீத விற்பனை டெல்லியில் உள்ள கடையில்தான் நடைபெற்றுள்ளது என தெரியவந்துள்ளது. மும்பையில் உள்ள ஆப்பிள் நேரடி விற்பனை நிலையத்தில் சுமார் 100 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் .அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை பேசும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
அதேபோல டெல்லியில் உள்ள ஆப்பிள் நேரடி விற்பனை நிலையத்தில் 70 ஊழியர்கள் இருக்கின்றனர். இவர்களும் பல மொழிகளில் பேசத் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் வரும் காலங்களில் ஐபோன் மட்டுமில்லாமல் தங்களுடைய ஸ்மார்ட் வாட்ச், மேக் புக் உள்ளிட்டவற்றின் விற்பனையையும் இந்தியாவில் அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications