செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகளவில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ, இந்தியாவில் தனது நிறுவனத்தை மும்பையில் பதிவு செய்திருந்தாலும், முதல் அலுவலகத்தை புது டெல்லியில் அடுத்த சில மாதங்களில் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு டெக் நிறுவனமாக ஓபன்ஏஐ ஏன் பெங்களூரில் தனது அலுவலகத்தை திறக்கவில்லை என்பது ஒரு முக்கிய விவாத பொருளாக மாறியிருக்கும் வேளையில், ஓபன்ஏஐ இந்திய வர்த்தகத்தின் முதல் ஊழியர் யார் தெரியுமா..?
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஏஐ சந்தையை கூகுள், கார்க் போன்ற நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு முன்பு ஓபன்ஏஐ கைப்பற்ற வேண்டும் என்ற முக்கிய எண்ணத்துடன் களமிறங்கியுள்ளது. ஓபன்ஏஐ நிறுவனம் வேகமாக ஊழியர்களை தேர்வு செய்யும் பணிகளை துவங்கியிருக்கிறது.

இந்தியாவில் முதல் ஊழியர்:
ஓபன்ஏஐயின் இந்தியாவுக்கான பொதுக் கொள்கை மற்றும் கூட்டாண்மைத் தலைவராக பணியாற்றும் பிரக்யா மிஸ்ரா தான், இந்நிறுவனத்தின் முதல் இந்திய ஊழியராக பணியில் இணைந்துள்ளார். ட்ரூகாலர் மற்றும் மெட்டா நிறுவனங்களில் முன்பு பணியாற்றிய பிரக்யா, லிங்க்ட்இன் பதிவில் ஓபன்ஏஐ இந்தியாவில் அலுவலகத்தை திறப்பது குறித்து மிகுந்த உற்சாகத்துடன் பதிவிட்டு உள்ளார்.
"ஓபன்ஏஐயின் இந்தியாவுக்கான முதல் ஊழியராக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தியாவில் எங்கள் வளர்ச்சி ஒரு சிறு தீப்பொறியிலிருந்து தொடங்கி, இப்போது ஒரு பெரிய முன்னேற்றத்திற்கு தயாராக உள்ளது.புதிய ஊழியர்கள் எங்கள் பயணத்தில் இணைந்துள்ளனர்," என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் குடிமை சேவைகளில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்பட்ட சேவைகளை வழங்குவதற்கு ஓபன்ஏஐ-யின் இந்த முயற்சி உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் சாட்ஜிபிடியின் வளர்ச்சி:
இந்தியா, சாட்ஜிபிடியின் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் உலகளவில் இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாகும். கடந்த ஒரு ஆண்டில், இந்தியாவில் சாட்ஜிபிடி-யின் வாராந்திர அடிப்படையில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது என பிரக்யா மிஸ்ரா தெரிவித்தார்.
உலகளவில் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது, மேலும் ஓபன்ஏஐ தளத்தில் உலகின் டாப் ஐந்து டெவலப்பர் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் ஓபன்ஏஐ-யின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த, இந்தியாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'சாட்ஜிபிடி கோ' என்ற திட்டத்தையும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக 'ஸ்டடி மோட்' என்ற புதிய சேவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள், இந்தியாவின் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏஐயின் தாக்கத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என பிரக்யா மிஸ்ரா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
2வது முக்கிய ஊழியர்:
ஓபன்ஏஐ, இந்தியாவில் தனது செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக, முன்னாள் ட்விட்டர் இந்தியா தலைவர் ரிஷி ஜெய்ட்லியை மூத்த ஆலோசகராக நியமித்துள்ளது. இந்திய அரசுடன் ஏஐ கொள்கைகள் குறித்து விவாதங்களை எளிதாக்குவதற்கு ரிஷி உதவுவார்.
இதற்கு முன்பாக, ஏப்ரல் 2024 இல், பிரக்யா மிஸ்ராவை இந்தியாவுக்கான பொதுக் கொள்கை மற்றும் கூட்டாண்மைத் தலைவராக நியமித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications