மேற்காசிய நாடுகளில் போர் சூழல் மூன்றாவது வாரமாக நீடிப்பதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் பெட்ரோல் விலைகளை உயர்த்தியுள்ளன. போர் காரணமாக வளைகுடாவில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்விலேயே இருக்கிறது. இந்த சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளன.
கச்சா எண்ணெய் சப்ளை தடை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு என பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் நிதி சுமையை மக்கள் மீது திணிக்க தொடங்கிவிட்டன. கச்சா எண்ணெய் கொள்முதல் விலை உயர்ந்ததால் முதல்கட்டமாக பீரிமியம் பெட்ரோல்களின் விலையை உயர்த்தியுள்ளன.

எனவே நாடு முழுவதும் பிரீமியம் பெட்ரோல் விலைகள் உயர்த்தப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன்படி Bharat Petroleum Corporation Limited (BPCL) speed பெட்ரோல் விலை , Hindustan Petroleum Corporation Limited (HPCL) நிறுவனத்தின் Power பெட்ரோல் விலை, Indian Oil நிறுவனத்தின் XP90 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 2.09இல் இருந்து ரூ. 2.35 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன.
எனவே நீங்கள் பவர் பெட்ரோல் எனப்படும் பிரீமியம் பெட்ரோல் பயன்படுத்துபவராக இருந்தால் இனி ஒரு லிட்டருக்கு கூடுதலாக 2 ரூபாய்க்கு மேல் பெட்ரோலுக்கு செலவிட வேண்டும். தற்போதைக்கு பவர் பெட்ரோல் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பெட்ரோல் விலைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
ஈரானில் தொடர்ந்து போர் நீடிக்கிறது, இது எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. இந்திய நிறுவனங்கள் அமெரிக்க டாலர் கொடுத்து தான் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று 93 ரூபாய் என வரலாற்று உச்சத்தை எட்டிவிட்டது. முன்னதாக தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் தந்த ரஷ்யாவும் சந்தை விலைக்கு தான் தருவோம் என அறிவித்துவிட்டது.
எனவே இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முன்பை விட அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கின்றன. இதனால் முதல் கட்டமாக அந்த நிதிச் சுமையை மக்களின் மீது சுமத்தும் வகையில் பிரீமியம் ரகப் பெட்ரோல் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன. இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டது. எனவே தங்களுடைய வாகனங்களுக்கு பிரீமியம் பெட்ரோல் ,பவர் பெட்ரோல் போடக்கூடிய வாகன ஓட்டிகள் இன்று முதல் சற்று கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
முன்னதாக எல்பிஜி போல பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் கடந்த வாரத்தில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் பெட்ரோல் , தட்டுப்பாடு இல்லை என கூறி வருகிறது. இந்தியாவிடம் போதிய கையிருப்பு இருக்கிறது என்றும் தெரிவித்து வருகிறது. இதனால் பெட்ரோல் நிலையங்களில் பேனில் பையிங் என்பது தணிந்துள்ளது.


Click it and Unblock the Notifications