அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பிக் பியூட்டிஃபுல் பில் (Big Beautiful Bill Event) நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், "பலர் ஒப்பந்தங்களில் பங்கு பெற விரும்புகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பத்திரிகைகள் 'உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வமுள்ளவர்கள் இருக்கிறார்களா?' என்று கேள்வி எழுப்பின. நாங்கள் நேற்றுக் சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். மேலும், விரைவில் இந்தியாவுடனும் "மிகப் பெரிய" வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம்: அதே நேரத்தில், இந்தியாவுடனும் விரைவில் ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். நாம் இந்தியாவுடன் வர்த்தகத்தை மேம்படுத்தும் போது, அதே நேரத்தில் சீனாவுடனான ஒப்பந்தமும் செயல்பாட்டுக்கு வந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "எல்லா நாடுகளுடனும் ஒப்பந்தங்கள் செய்யமாட்டோம். சில நாடுகளுக்கு மட்டும் நாங்கள் கடிதம் அனுப்பி, உயர்ந்த வரி விகிதங்களை ஏற்க சொல்ல இருக்கிறோம். இது எளிய வழி, ஆனால் என் மக்கள் இதை விரும்பவில்லை. அவர்கள் சில ஒப்பந்தங்களை ஏற்க விரும்புகிறார்கள். ஆனால் நான் நினைக்கும் அளவுக்கு அதிக ஒப்பந்தங்களை வேண்டாமென்று கூறுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம் கையெழுத்து : சீனாவுடனான ஒப்பந்த விவரங்களை டிரம்ப் விரிவாக வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், ஜூன் மாத தொடக்கத்தில் அமெரிக்கா-சீனா வர்த்தக போரில் சமாதானம் ஏற்பட்டு, புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாடுகளும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தகத்தை ஊக்குவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பல மாதங்களாக வரி உயர்வுகள் மற்றும் வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மையால் தடுமாறிக் கொண்டிருந்த உலகளாவிய சந்தைகள், வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு இந்த வர்த்தகப் போர் நிறுத்தம் தற்காலிக நிவாரணத்தைக் கொண்டு வந்துள்ளது.
இருநாடுகளுக்கும் பலன் : இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை மன்றத்தில் பேசிய அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், "இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி கட்டத்துக்குள் வந்திருப்பதாகவும், இது இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நான் நம்புகிறேன். இந்த ஒப்பந்தம் மிக நெருங்கிய காலத்தில் அமையும், ஏனெனில் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒன்றை நாம் கண்டுபிடித்துள்ளோம்"" என்று தெரிவித்திருந்தார்.
விரைவில் இந்தியா - அமெரிக்கா புதிய ஒப்பந்தம் : இதற்கிடையே, ஜூன் 10-ஆம் தேதி, இந்தியாவின் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான சமநிலை பொருந்திய வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை செய்து வருவதாக தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 2025-ல் சந்தித்தபோது இந்த ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும், இது இரு நாடுகளின் வர்த்தக வளர்ச்சிக்கு மிக முக்கிய வாய்ப்பு என்றும் அவர் கூறியிருந்தார். இந்த ஒப்பந்தம் அமெரிக்கா - இந்தியா இடையேயான நெருக்கமான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications