இந்தியாவின் சிலிக்கான் வேலி என கர்நாடக மாநிலம் பெங்களூரு அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு பல்வேறு ஐடி நிறுவனங்களும் இங்கேதான் தங்களுடைய தலைமை அலுவலகங்களையும், பெரிய பெரிய அலுவலகங்களையும் அமைத்திருக்கின்றன. ஐடி அலுவலகங்களை தாண்டி ஜிசிசி மையங்களும் அதிக அளவில் பெங்களூரில் நிறுவப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் வேலை மார்க்கமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பெங்களூருக்கு வருகை தருகின்றனர். இதனால் அங்கே போக்குவரத்து உள்கட்டமைப்பு என்பது ஸ்தம்பித்து போய் நிற்கிறது. தினம்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதாக மக்கள் புகார் கூறிவரும் நிலையில் தான் கர்நாடக மாநில அரசு பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவைகளை தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளை மெட்ரோ ரயில் உடன் இணைக்கும் வகையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை கர்நாடக மாநில அரசு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது பிரஸ்டீஜ் குழுமத்தோடு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு மெகா அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஐடி ஊழியர்களை குறி வைத்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ சேவையை மேம்படுத்துவதில் தனியார் நிறுவனங்களுடன் கை கோர்த்துள்ளது. புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரஸ்டீஜ் குழுமத்தோடு பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது.
இதன்படி பிரஸ்டீஜ் குழுமம் பெல்லாந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை குத்தகைக்கு எடுத்து அதனை நவீன கட்டமைப்புகளுடன் மேம்படுத்த இருக்கிறது. பெங்களூர்வின் மிக முக்கியமான ஒரு மெட்ரோ ரயில் வழித்தடம் ப்ளூ லைன் வழித்தடம். சில்க் போர்டில் தொடங்கி கே ஆர் புரம் வரை செல்லக்கூடிய இந்த வழித்தடத்தில் தான் பெல்லாந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கிறது. பெங்களூருவில் அதிகமான ஐடி அலுவலக செயல்படக்கூடிய பகுதியாக பெல்லாந்தூர் திகழ்கிறது. இங்கே 80 மில்லியன் சதுர அடி பரப்பளவு அலுவலக தளங்களே இருக்கின்றன, லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் வேலை செய்கின்றனர். அந்த வகையில் பெல்லாந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ஐடி ஊழியர்களுக்கு மிக முக்கியமான ஒரு ரயில் நிலையமாக இருக்கிறது.
பிரஸ்டீஜ் குழுமம் 30 ஆண்டுகளுக்கு இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்தி பராமரிக்கும் குத்தகை எடுத்துள்ளது. இனி இந்த ரயில் நிலையம் பிரஸ்டீஜ் பெல்லாந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என அழைக்கப்படும். ரயில் நிலையத்தில் இருக்கும் 3 ஆயிரம் சதுர அடி கமர்சியல் பரப்பளவையும் , ஆயிரம் சதுர அடி விளம்பரத்துக்கான பரப்பையும் பிரஸ்டீஜ் குழுமம் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. அதே வேளையில் பயணிகளின் சௌகரியத்திற்கு ஏற்ப பல்வேறு மேம்பாடு பணிகளை பிரஸ்டீஜ் குழுமம் இங்கு மேற்கொள்ள இருக்கிறது.
ஐடி பூங்காக்களில் இருந்து நேரடியாக ஸ்கைவாக் மூலம் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்க முடிவு செய்துள்ளது. இது முடிந்துவிட்டால் ஐடி ஊழியர்கள் பெல்லாந்தூரில் இருந்து நேரடியாக தங்கள் அலுவலகத்துக்கும், அலுவலகத்தில் இருந்து நேரடியாக மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் ஸ்கைவாக் மூலமாகவே செல்லலாம். சாலையில் நடக்க வேண்டும் , சாலையை கடக்க வேண்டும் என்ற அவசியம் இனி இருக்காது.


Click it and Unblock the Notifications