இந்திய ரியல் எஸ்டேட் சந்தை இப்போது அசைக்க முடியாத அளவுக்கு வலுவாகவும், லாபகரமானதாகவும் தோன்றலாம். ஆனால், சொத்து விலைகள் எப்போதும் உயர்ந்துகொண்டே இருக்காது என்றும், பொருளாதார நிலைமைகள் மாறும்போது பெரிய சரிவுகள் ஏற்படும் என்றும் ரியல் எஸ்டேட் ஆலோசகர் ராஜ் தீப் சவுகான் எச்சரித்துள்ளார்.
ஜப்பான், சீனா, மற்றும் அமெரிக்காவில் நடந்த வரலாற்றுச் சரிவுகளையே அவர் தனது எச்சரிக்கைக்கு ஆதாரமாக காட்டியுள்ளார். ராஜ் தீப் சவுகான் வெளியிட்டுள்ள தனது லிங்க்ட்இன் சமூக வலைதள பதிவில், "உங்கள் உறவினர் ஒருவர் 2007-இல் ஒரு பிளாட் வாங்கினார். அவர் இன்னமும் தன் முதலீடு செய்த பணத்தைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறார்" என்று ஒரு வரியை எழுதியுள்ளார். இதன் மூலம், பொருளாதார வளர்ச்சி சாதகமாக இருக்கும்போது மட்டுமே சொத்து மதிப்பு உயரும் என்ற உண்மையை அவர் தெளிப்படுத்தியுள்ளார்.

ரியல் எஸ்டேட் முதலீடு எப்போதும் லாபம் தரும் என்ற எண்ணம் தவறானது என்று கூறும் சவுகான், உலக நாடுகளில் நடந்த பெரிய வீழ்ச்சிகளையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஜப்பானின் சோகம் : "1989-ஆம் ஆண்டில், டோக்கியோவில் இருந்த ஒரு அரச அரண்மனையின் நில மதிப்பு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் முழுவதையும் விட அதிகமாக இருந்தது. பின்னர் அது பயங்கரமாக சரிந்தது. 2001-ஆம் ஆண்டுக்குள் நிலத்தின் மதிப்புகள் 70 சதவீதம் குறைந்துவிட்டன. 1989-இல் அதிக விலைக்குச் சொத்து வாங்கியவர்கள், 36 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை தங்கள் பணத்தை மீட்க முடியாமல் தவிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நிதி நெருக்கடி : "அமெரிக்காவில் 2007 முதல் 2009 வரை சொத்து விலைகள் 19 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. 2009-இல் மட்டும் 28 இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் வங்கிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டின் மதிப்பை இழந்தவர்கள், மீண்டும் பழைய நிலையை அடையவே ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏன் இப்போது நம்பிக்கை அளிக்கிறது..?: அதே சமயம், இந்த வரலாற்றுச் சரிவுகளில் இருந்து இந்தியா தற்போது வேறுபட்டு நிற்பதற்கான சரியான காரணங்களையும் அவர் கூறியுள்ளார்.
வேகமான வளர்ச்சி : இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் சிறப்பாக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது. நமது நகர்ப்புறப் பகுதிகளில் 10 கோடிக்கும் அதிகமான புதிய மக்கள் இணைகிறார்கள். அலுவலகத் தேவைக்கும், நாம் கட்டித் தரும் அலுவலக இடத்திற்கும் உள்ள விகிதம் 0.49 ஆக உள்ளது. அதாவது, 2 சதுர அடி தேவைக்கு 1 சதுர அடி இடம் மட்டுமே கட்டப்படுகிறது. இந்த வலுவான பொருளாதார அடிப்படைகள்தான், இந்தியாவின் தற்போதைய சந்தை வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எச்சரிக்கை தேவை : இந்த சாதகமான அம்சங்கள் இருந்தபோதும், நிதானம் அவசியம் என்று சவுகான் எச்சரித்துள்ளார். பொருளாதார அடிப்படைகள் சரியாக இருக்கும்போது மட்டுமே லாபம் வரும். இல்லையெனில், நீங்கள் மற்றவர்களின் திருமணத்தில் சொல்லப்படும் ஒரு எச்சரிக்கை கதையாக மாறிவிடுவீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications