சிலருக்கு மருந்து மாத்திரைகள் தங்களுடைய அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. தலைவலி, காய்ச்சல், வயிறு வலி என எது ஏற்பட்டாலும் உடனே மருத்துவமனைக்குச் சென்று மாத்திரை வாங்கி பயன்படுத்துகிறோம். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் மாத்திரைகளை நம்பி இருக்கிறோம். அப்படி இருக்கையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 900-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை 1.74 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது.
எந்தெந்த மருந்துகளின் விலை அதிகரிக்கப் போகிறது? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். இந்த விலை அதிகரிப்பு குறிப்பாக தீவிர தொற்று நோய்கள், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.

மருந்து விலைகள் DPCO 2013 விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் மாற்றப்படுகின்றன. 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கு மருந்தின் உச்சம் வரம்பு விலைகள் 0.00551% அதிகரிக்கப்பட்டது. புதிய மருந்துகளின் சில்லறை விலையும் அதிகரித்தது. அதன்படி இந்த நிதியாண்டிலும் 1.75% வரை மருந்து விலைகள் உயர்ந்துள்ளன.
எந்தெந்த மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது?: பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின் படி 250 மில்லி கிராம் ஆன்டிபயாட்டிக் அசித்ரோமைசின் மாத்திரை ரூ. 11.87-ஆக உயர்ந்துள்ளது. 500 மில்லி கிராம் ஆன்டிபயாட்டிக் அசித்ரோமைசின் மாத்திரைகள் ரூ.23.98 அதிகரித்துள்ளது.
வலி நிவாரணத்திற்கு வழங்கப்படும் டைக்ளோஃபெனாக், ஒரு மாத்திரைக்கு ரூ. 2.09 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்யூபுரூஃபன் 200 மி.கி 1 மாத்திரைக்கு ரூ. 0.72 அதிகரித்துள்ளது. இப்யூபுரூஃபன் 400 மி.கி 1 மாத்திரைக்கு ரூ. 1.22-ஆக அதிகரித்துள்ளது. சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தப்படும் டபாக்லிஃப்ளோசின், மெட்ஃபோர்மின், ஹைட்ரோகுளோரைடு, கிளிமெபிரைடு கலந்த மாத்திரைகள் ஒரு மாத்திரைக்கு ரூ.12.74-ஆக அதிகரித்துள்ளது.
ஆன்டிவைரல் மாத்திரையான அசைக்ளோவிர் 200 மி.கி ஒரு மாத்திரைக்கு ரூ. 7.74-ஆக உள்ளது. அசைக்ளோவிர் 400 மி.கி ஒரு மாத்திரைக்கு ரூ. 13.90-ஆக உள்ளது. ஆன்டிமலேரியல் மாத்திரையான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் 200 மி.கி ஒரு மாத்திரைக்கு ரூ. 6.47-ஆக உள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் 400 மி.கி ஒரு மாத்திரைக்கு ரூ. 14.04-ஆக உள்ளது.
மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் மருந்து உற்பத்தியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலையையும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒருவேளை மருந்துகளின் விலை அதிகரித்தால் அது குறிப்பிட்ட சில நோய்களுக்காக நீண்ட காலமாக மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்ளும் நபர்களை பாதிக்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications