சென்னை: பிரின்ஸ்டான் டிஜிட்டல் குழுமம் (Princeton Digital Group) சென்னை மற்றும் மும்பையில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகின் முன்னணி தரவு மைய நிறுவனமாக பிரின்ஸ்டான் டிஜிட்டல் குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி ஆசியா முழுவதும் 5 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட தரவு மையங்கள் அமைக்கப்படும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் 1 பில்லியன் டாலர்கள் இந்தியாவில் முதலீடு செய்யப்படும் எனக் கூறியுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் மும்பை மற்றும் சென்னை ஆகிய இரண்டு நகரங்களில் தங்களுடைய தரவு மையத்தை நிறுவ இருப்பதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது. பிடிஜி நிறுவனம் மும்பையில் ஒரு டேட்டா மையத்தை நிறுவியுள்ளது இது மேற்கொண்டு விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
இதற்காக 15 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பிரின்ஸ்டான் டிஜிட்டல் குடும்பம் என்பது ஆசியாவின் முன்னணி தரவு உள்கட்டமைப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தரவு மைய ஆப்ரேட்டராகவும், கிளவுட் சேவை வழங்குநராகவும் செயல்பட்டு வருகிறது.
நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்புகள், தரவுகளை மொத்தமாக விற்பனை செய்வது ,செயல்பாடு மற்றும் பராமரிப்பு மேலாண்மை உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சீனா, சிங்கப்பூர் ,இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தற்போது டேட்டா சேவைகளை வழங்கி வருகிறது. கூடிய விரைவில் இந்த நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக தற்போது மும்பையில் இருக்கும் தங்களுடைய அலுவலகத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோல சென்னையில் சிஹெச் 1 என்ற பெயரில் 9.3 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய டேட்டா மையத்தை இந்த நிறுவனம் நிறுவ இருக்கிறது.
தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சிஸ்டம் அமைப்புகளுக்கான தேவை அதிகரித்து இருப்பதால் இந்த நிறுவனம் இந்தியாவில் தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கிளவுட் உள் கட்டமைப்புகளுக்கு சிறந்த நகரங்களாக சென்னை மற்றும் மும்பை இருப்பதாலேயே தங்களுடைய டேட்டா மையத்தை இங்கே அமைப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications