இன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கார்ப்பரேட் உலகில், பல இளைஞர்கள் அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகளை தேடி அலைகிறார்கள். ஆனால், இறுதியில் அவர்களுக்கு கிடைப்பதோ அதிக வேலை நேரம், கடுமையான மன அழுத்தம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்தியின்மை மட்டுமே. இதற்கு முற்றிலும் மாறான ஒரு வழியை 28 வயதான காசிடி ஓ'ஹாகன் கண்டுபிடித்துள்ளார்.
இவரது வேலை, ஆடம்பரம், சாகசம் மற்றும் அதிகப் பணம் ஆகியவற்றை ஒருசேர தருகிறது. குளிர்காலத்தை ஆஸ்பென் போன்ற பனிப் பிரதேசங்களில் கழிக்கும் இவர், கோடைக்காலத்தை தனிப்பட்ட சொகுசு விடுதிகளான ஹேம்ப்டன்ஸில் செலவிடுகிறார். மேலும், வேலையின் இடையில் புவேர்ட்டோ ரிக்கோ, மாலத்தீவுகள், இந்தியா மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கு, தன் முதலாளியின் சொந்த ஜெட் விமானத்தில் பறக்கிறார்.

ஓ'ஹாகன் ஒரு திரைப்பட நடிகையோ அல்லது சமூக ஊடகப் பிரபலமோ அல்ல. அவருடைய பதவி வெறும் குழந்தை காப்பாளர் என்பதுதான் இங்கு வியக்க வைக்கும் விஷயம். இருப்பினும், அவருக்குக் கிடைக்கும் சலுகைகள், உலகப் பணக்காரர்களுக்கு இணையாக உள்ளன.
பிசினஸ் இன்சைடர் பத்திரிகையின்படி, இவருக்கு ஓய்வூதிய திட்டம். முழு மருத்துவக் காப்பீடு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை, தனிப்பட்ட சமையல்காரர் சமைக்கும் உணவு மற்றும் அவருக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் என அனைத்தும் கிடைக்கின்றன.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் முன்னர் பார்த்த அதிகச் சம்பளம் கொண்ட மருத்துவ விற்பனை வேலை கூட, இவ்வளவு சலுகைகள் கொடுக்கவில்லை" என்று அவர் தனது முந்தைய வேலையைப் பற்றி வருத்தத்துடன் கூறினார்.
ஓ'ஹாகன், கடந்த 2021-ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் மருத்துவ விற்பனை வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவர் ஆண்டுக்கு சுமார் ரூ.60 லட்சம் சம்பாதித்து வந்துள்ளார். இருப்பினும், நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய அழுத்தத்தால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால், அந்த வேலையை ராஜினாமா செய்தார்.
பின்னர், தனக்குப் பொருத்தமற்ற வேலையை விட்டுவிட்டதாக உணர்ந்த அவர், ஒரு வருடத்திற்குள் குழந்தை காப்பாளராக பணிக்கு சேர்ந்தார். அன்பாகப் பழகுவது, அக்கறையுடன் சேவை செய்வதுதான் எனது இயல்பு. அந்தச் சேவை சார்ந்த வேலையை விட்டுவிட்டு கார்ப்பரேட்டில் சிக்கிக்கொண்டேன் என்பதை உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தை காப்பாளராக பணியில் சேர்ந்த பிறகு அவருக்குக் கிடைத்த புதிய சம்பளம், ரகசிய ஒப்பந்தம் காரணமாக சரியாக தெரியாவிட்டாலும், ஆண்டுக்கு ரூ.1.3 கோடி முதல் ரூ.2 கோடி வரை இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது அவரது முந்தைய சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம். நிதி ஆதாயத்தை தாண்டி, கட்டுப்பாடுகளற்ற பயணங்கள், சாகசங்கள் மற்றும் சரியான வேலை-வாழ்க்கைச் சமநிலை போன்ற அரிய வாய்ப்புகளை அவர் பெற்றுள்ளார்.
உலக அளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், அவர்களின் தனிப்பட்ட நிர்வாகம், விமானங்கள் மற்றும் படகுகளை நிர்வகிக்க இதுபோன்ற தனிப்பட்ட ஊழியர்களுக்கான தேவை அதிகரித்து வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications