ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதன் உறுப்பினர்களுக்காக வருங்கால வைப்பு நிதி திட்டத்தை வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், EPFO உறுப்பினர்கள் தங்கள் சேவை காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பென்ஷன் பெற முடியும். இந்தப் பதிவில் 10 வருடங்கள் பிரைவேட் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? அதை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து பார்ப்போம்.
ஊழியர்கள் தாங்கள் பணியில் இருக்கும் போது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் மாதம் செய்யக்கூடிய பங்களிப்பில் குறிப்பிட்ட தொகையானது ஓய்வூதிய திட்டத்திற்காக ஒதுக்கப்படும். இந்தத் திட்டம் தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் (EPS) என அழைக்கப்படுகிறது. மீதி தொகை EPF திட்டத்தில் டெபொசிட் செய்யப்படும்.

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் நவம்பர் 16, 1995 அன்று EPFO அமைப்பால் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னர் 1971-ஆம் ஆண்டில், ஃபேமிலி பென்ஷன் ஸ்கீம் என்ற திட்டம் இருந்தது. இந்த திட்டத்தில் உறுப்பினர் இறந்த பின்னரே அவருடைய குடும்பத்தினர் பென்ஷன் பெற்றனர். உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது.
பென்ஷன் பெற என்னென்ன தகுதி?: ஒரு நபர் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் பென்ஷன் பெற சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை, 58 வயதை எட்டுதல், பதிவு செய்யப்பட்ட ஈபிஎப் உறுப்பினராக இருத்தல் மற்றும் வேலை வாய்ப்பு முழுவதும் EPS திட்டத்திற்கு தொடர்ந்து பங்களித்தல் போன்றவற்றை செய்தால் மட்டுமே பென்ஷன் பெற முடியும்.
முன்பே பார்த்தது போல் EPF உறுப்பினர்கள் தங்கள் பணிக்காலத்தில் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்காக பங்களிகின்றனர். இதில் 8.33 சதவீதம் EPS திட்டத்திலும், 3.67 சதவீதம் EPF திட்டத்திலும் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த EPS திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகை தான் பிறகு பென்ஷனாக வழங்கப்படுகிறது.
தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: ஒரு நபர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகாலம் சேவை செய்து 58 ஆண்டுகளை பூர்த்தி செய்திருந்தால் அவர் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக 1,000 பெறுவார். 2014-ஆம் ஆண்டில் மத்திய அரசு EPS திட்டத்தின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு 1,000-ஆக நிர்ணயித்தது. ஆனால் இந்த குறைந்தபட்ச தொகையை ரூ.7500-ஆக அதிகரிக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அதேபோல இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் ஒரு உறுப்பினரின் சேவை, அவர்கள் ஓய்வூதிய நிதிக்கு பங்களித்த ஆண்டுகளின் எண்ணிக்கை மற்றும் ஓய்வூதியத்திற்கு முந்தைய 60 மாதங்களின் சராசரி சம்பளத்தை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.
கீழ்காணும் ஃபார்முலாவை வைத்து உங்களுக்கு எவ்வளவு இபிஎஸ் ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதிய சம்பளம் × ஓய்வூதிய சேவை) / 70
இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஒரு நபர் 15,000 ரூபாய் ஓய்வூதிய சம்பளம் பெறுகிறார். மேலும் 10 ஆண்டு சேவையை முடித்திருக்கிறார் என்றால் அவருடைய மாதாந்திர ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
மாதாந்திர ஓய்வூதியம் = (15,000 × 10) / 70 = ரூ. 2,143
குறைந்தபட்ச சேவை காலம் 10 ஆண்டுகள் இருந்தாலும், ஒரு ஊழியர் ஓய்வூதியத்தைப் பெற முடியும் என்பதை இந்த எடுத்துக்காட்டு நிரூபிக்கிறது. இருப்பினும், நீண்ட சேவை காலம் அதிக மாதாந்திர ஓய்வூதியத் தொகையை பெற உதவும்.


Click it and Unblock the Notifications