டெல்லி: இந்தியாவில் அரசு வேலை என்aறாலே ஒரு தனி மரியாதை உண்டு. குறிப்பாக வங்கி வேலைவாய்ப்புகள் பலரது விருப்பமான அரசு வேலைகளில் ஒன்றாக இருக்கிறது. வங்கி வேலை என்றால் காலை 9 மணிக்கு சென்று மாலை 5 மணிக்கு பணி முடிந்துவிடும் , அரசு விடுமுறை நாட்களில் விடுமுறைகள் என தொந்தரவு இல்லாத ஒரு வேலை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.
ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. தி பிரிண்ட் தளம் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களிடம் நேர்காணல் செய்து தற்போதைய பொதுத்துறை வங்கி பணிகளின் நிலவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு பிரஷர் குக்கருக்குள் இருப்பது போல உணர்வதாக தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் வேலைகளை விட்டு வங்கி பணிக்கு வந்தவர்கள் மீண்டும் அதற்கே சென்று விடலாம் என்ற எண்ணம் தோன்றுகிறதாம்.

தனியார் வங்கிகளுடன் போட்டி போட வேண்டிய சூழல் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு இருக்கிறது. ஒரு மாதத்திற்குள் குறிப்பிட்ட அளவு வாகன கடன் , வீட்டு கடன் உள்ளிட்டவற்றை வழங்க இருக்க வேண்டும், வாடிக்கையாளர்களிடம் இருந்து பிக்ஸட் டெபாசிட்டுகள் மற்றும் வங்கிகள் வழங்கும் பிற திட்டங்களில் சேர வைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறதாம்.
இதனால் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டிய அளவுக்கு நிலைமை மாறிவிட்டது என தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான வங்கி ஊழியர்கள் தங்கள் நாள்தோறும் 12 மணி நேரம் வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர். காலை 9 மணிக்கு வேலை தொடங்கினால், இரவு 9 மணி வரை வேலை இருக்கிறதாம். வேலை அழுத்தம் மிகுந்ததாக மாறிவிட்டது எனக் கூறுகின்றனர்,இதன் காரணமாக சனி , ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூட வங்கிக்கு வந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாக கூறுகின்றனர்.
நவீன தொழில்நுட்பங்களின் வருகையால் வங்கி சார்ந்த சில பேப்பர் ஒர்க்குகள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் முறையில் மாறிவிட்டன. ஆனால் இந்த புதிய தொழில்நுட்பங்களை கையாளும் வகையிலான திறன் கொண்ட ஊழியர்களை அதிகளவில் பணிக்கு அமர்த்த வில்லை என வங்கி பணியாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது பெருமளவில் ஊழியர்களுக்கான குறைபாடு இருப்பதாக தெரிவிக்கின்றனர். வங்கி வேலைகள் டிஜிட்டல் மயமாகி ஆகிவிட்டாலும் சில வேலைகளை மனிதர்கள் தான் செய்ய வேண்டும் பெரும்பாலான வங்கிகளில் ஊழியர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருக்கிறது என்கிறார், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் வெங்கடாசலம்.
பொதுத்துறை வங்கிகளில் 2006 - 2013ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் பெரும்பாலான மூத்த அதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டனர். எனவே குறைந்த பணி அனுபவம் கொண்டவர்கள் எல்லாம் மூத்த அதிகாரிகள் நிலைக்கு வந்துவிட்டதால் அவர்கள் பணிச்சுமைகளை கையாள முடிவதில்லை என்கிறார்.
வழக்கமாக பொதுத்துறை வங்கிகளில் புரோபேஷனரி ஆபிஸர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் போது லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பம் செய்வார்கள். ஆனால் தி பிரிண்ட் தளம் வெளியிடும் செய்தியின் அடிப்படையில் 2017 - 2018 ஆம் ஆண்டில் 11.27 லட்சம் பேர் ப்ரோபேஷனரி ஆபீஸர் பணிக்கு விண்ணப்பம் செய்தனர், அதுவே 2022 ஆம் ஆண்டில் 5.74 லட்சம் என குறைந்துவிட்டது. கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதம் என குறைந்துவிட்டது என சொல்லப்படுகிறது.
இதனிடையே பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள் சரியாக பணிக்கு வரமாட்டார்கள் , வாடிக்கையாளர்கள் நட்பு ரீதியாக பழகும் வகையில் இருக்கமாட்டார்கள் என்ற பிம்பம் இருக்கும் நிலையில் அதனை போக்குவதற்காகவும் , தனியார் வங்கிகளுக்கு இணையாகவும் போட்டி போட வேண்டிய சூழல் இருப்பதாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள்.
Written by: Devika


Click it and Unblock the Notifications