புதுச்சேரி: புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்பு நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் மரக்காணம் புதுச்சேரி இடையே சனிக்கிழமை அன்று இரவு கரையை கடந்தது. அப்போது புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கன மழை காரணமாக புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு நிவாரணங்களையும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள பாதிப்பு நிவாரணமாக தலா 5000 ரூபாய் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். புதுச்சேரியில் கனமழைக்கு உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கனமழையால் உயிரிழந்த கால்நடைகளுக்கும் அவர் நிவாரணம் அறிவித்துள்ளார். கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா 40,000 ரூபாயும், ஆடுகளுக்கு தலா 20,000 ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மீனவர்களை பொறுத்தவரை புயலால் சேதமடைந்த படகு ஒன்றுக்கு 10,000 ரூபாயும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 20,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல மழை வெள்ளத்தால் மற்றும் புயல் காற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் 48.4 சென்டிமீட்டர் மழை பதிவானது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு இது என கூறப்படுகிறது. இந்த வரலாறு காணாத மழை புதுச்சேரியில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு இடங்களிலும் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது .
தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு இடங்களில் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.
தற்போது அரசு அறிவித்துள்ள அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் என்ற நிவாரணத் தொகை விரைவாக மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications