ஆன்லைன் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மோசடி செய்பவர்கள் தீங்கிழைக்கும் லிங்குகளைப் பயன்படுத்தி தனிநபர்களின் பணத்தை அபகரிக்கும் செயலில் ஈடுபடுவதைக் காண்கிறோம். சைபர் குற்றங்களுக்கு எதிராக காலத்துறையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. அப்படித்தான் புனைவைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரே சைபர் மோசடிக்கு பலியாகி ரூ. 2.3 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.
புனேவுக்கு அருகிலுள்ள ஷாஸ்வாத் என்ற இடத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் புனே ஊரக போலீஸ் ஸ்டேஷனில் தனக்கு நடந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின் படி பாதிக்கப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் ஒரு பேக்கரியில் பணம் செலுத்த முயன்றுள்ளார். அப்போதுதான் இந்த மோசடி சம்பவம் தொடங்கியது.

பரிவர்த்தனையை முடிப்பதற்காக QR கோடை ஸ்கேன் செய்துள்ளார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவருடைய சேமிப்பு கணக்கில் இருந்து 18,755 ரூபாய் டெபிட் செய்யப்பட்டிருப்பதைக் கவனித்தார். அங்கீகரிக்கப்படாத பணப் பரிவர்த்தனையின் காரணமாக பீதியடைந்த அந்த நபர் மற்ற வங்கி கணக்குகளை சரிபார்த்த போது அவருடைய சம்பள கணக்கில் இருந்த 12,250 உட்பட அனைத்து தொகையும் டெபிட் செய்யப்பட்டு கணக்கில் வெறும் 50 ரூபாய் மட்டுமே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பிறகு பாதிக்கப்பட்ட கான்ஸ்டபிள் தனது கோல்டு லோன் கணக்கில் இருந்த 1.9 லட்சம் ரூபாய்க்காக "ஒன் டைம் பாஸ்வேர்டை" பெற்றுள்ளார். ஆனால் OTP-யை அவர் பகிரவில்லை. இருப்பினும் பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்து அவருடைய அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டது. அவரது கிரெடிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தியும் 14,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு பரிவர்த்தனைகளை மோசடிக்காரர்கள் செய்ய முயன்றுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக கான்ஸ்டபிள் விரைவாக செயல்பட்டு அவருடைய வங்கி கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டை பிளாக் செய்து, மேலும் ஏற்பட இருந்த இழப்புகளைத் தடுத்தார். இவருடைய புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் மோசடி செய்பவர்கள் தீங்கிழைக்கும் APK ஃபயில் மூலம் கான்ஸ்டபிளின் மொபைல் போன் மற்றும் வங்கி கணக்குகளை அணுகியதால் பாதிக்கப்பட்டவர் பணத்தை இழந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மோசடிக்காரர்கள் அனுப்பிய தீங்கிழைக்கும் லிங்கை கான்ஸ்டபிள் தெரியாமல் கிளிக் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏபிகே ஃபைலை பதிவிறக்கம் செய்ய கான்ஸ்டபிள் திருப்பிவிடப்பட்டாரா? அவர் ஸ்கேன் செய்த QR கோடுதான் இதற்கு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெருகிய காலத்தில் அதிகரித்து வரும் மோசடி அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications