கடந்த 50 வருடத்தில் இல்லாத பெரும் மாற்றத்தை தற்போது உலகளாவிய ஆட்டோமொபைல் சந்தை எதிர்கொண்டு உள்ளது. இதனால் உலகளவில் இருக்கும் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் இனி பெட்ரோல் கார் தயாரிக்கலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு வந்துள்ளனர்.
எந்தொரு துறையாக இருந்தாலும் சரி சந்தை + வாடிக்கையாளர்கள் டிமாண்ட் அடிப்படையில் தான் உற்பத்தியும், வர்த்தகமும் இருக்கும். இப்படியிருக்கையில் ஈரான் போருக்கு பின்பு இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பாவிலும் பெட்ரோல் விலை அதிகரித்த நிலையில் மக்கள் பெட்ரோல் கார்களை விடுத்து எலக்ட்ரிக் கார் மற்றும் ஹைப்ரிட் கார்களை வாங்க துவங்கியுள்ளனர்.

சீனாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பே பெட்ரோல் கார்களுக்கும், மாற்று எரிபொருள் கார்களுக்குமான சமநிலையை கடந்த நிலையில் தற்போது உலகளவிலான கார் விற்பனை இந்த சமநிலை எட்டப்பட்டு உள்ளது.
அதாவது உலகளாவிய மொத்த கார் விற்பனையில் வெறும் 50 சதவீதம் மட்டுமே பெட்ரோல் கார்கள், மீதமுள்ள 50 சதவீத கார்கள் என்பது எலக்ட்ரிக் கார், ஹைப்ரிட் கார்கள், சிஎன்ஜி கார்கள், போன்றவை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர கார்களின் பங்கீடு என்பது வேகமாக அதிகரித்து வருகிறது என்பது தான், சந்தையின் டிமாண்ட்-க்கு ஏற்ப நிறுவனங்களால் வேகமாக கார்களை தயாரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார், ஹைப்ரிட் கார்கள், சிஎன்ஜி கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த சில வருடத்தில் ஹைப்ரிட் கார்கள் என்பது அடிப்படையாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, உலகில் அனைத்து நாடுகளும் எரிபொருள் விலை உயர்வால் இத்தகைய மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த வருடம் ஜனவரி - ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் பெட்ரோல் கார்களின் விற்பனை என்பது கடந்த வருடத்தை விட 10 சதவீதம் குறைந்து 2.025 கோடி கார்கள் விற்கப்பட்டு உள்ளது. ஒரு வருடத்தில் 10 சதவீதம் என்பது மிகப்பெரியது.
கடந்த 5-10 வருடத்தில் எலக்ட்ரிக் வாகன விற்பனை என்பது சீனாவை தாண்டி மிகவும் மந்தமாகவே இருந்தது, ஆனால் ஈரான் போர் இந்த மந்த நிலையை உடைத்துள்ளது. இந்த மாற்றம் அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆசிய பசிபிக் நாடுகள் அனைத்திலும் தெரிகிறது.
மேலும் இந்த நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் (பிரிட்டன், சுவிஸ், நார்வே நாடுகளையும் சேர்த்து) EV கார்களின் விற்பனை என்பது 52.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் டீசல் கார்களுக்கு ஏற்பட்ட நிலை பெட்ரோல் கார்களுக்கு வரலாம். ஆனால் பெட்ரோல் கார்கள் இல்லாமல் நீண்ட தூர பயணம் முடியாது என்பதால் பெட்ரோல் + EV, பெட்ரோல் + சிஎன்ஜி என ஹைப்ரிட் மாடல்களில் அடுத்தடுத்து கார்கள் தயாரிக்கப்படலாம்.
இந்தியாவில் 100 சதவீதம் எத்தனாலில் மட்டுமே இயங்கும் ப்ளெக்ஸ் இன்ஜின் கார்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
