உலகளவில் நிலவும் டீசல் பற்றாக்குறை பிரச்சனையைச் சரி செய்ய அமெரிக்கா பெரும் முயற்சிகளை எடுத்துவரும் வேளையில், இதன் ஒரு பகுதியாக 2022 முதல் நடந்து வரும் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் மூன்று தரப்பு மத்தியிலான கூட்டத்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பரிந்துரை செய்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. அதாவது ரஷ்யா சார்பில் சீனாவும், உக்ரைன் சார்பில் அமெரிக்காவும் மத்தியஸ்த நாடுகளாக இந்த பேச்சுவார்த்தையில் பங்கு பெற புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

அக்டோபர் 9ஆம் தேதி டீசல் சப்ளைக்கான பேச்சுவார்த்தையில் டிரம்புடன் நடைபெற்ற டெலிபோன் உரையாடலின்போது, அடுத்த மாதம் இந்த முத்தரப்பு கூட்டத்தை நடத்த புடின் பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே டிரம்ப் இரு நாடுகள் மத்தியில் Energy ceasefire நடைமுறைப்படுத்தியிருக்கும் வேளையில் உக்ரைன் அமெரிக்காவின் உத்தரவை மதிக்காமல் நேற்று 1000 டிரோன்களை கொண்டு ரஷ்யாவை தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளார்.
உலகில் தற்போது ரஷ்யா - உக்ரைன், அமெரிக்கா - ஈரான், யெமன்- சவுதி அரேபியா - ஹவுதி, இஸ்ரேல் - பாலஸ்தீனம் என உலக நாடுகள் மத்தியில் போர் அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், பேச்சுவார்த்தைக்காகவும், போரில் ஆதரவு அளிக்கப்படுதற்காகவும் பல நாடுகள் உள்ளே வருகிறது.
இதனால் யார் போர் செய்கிறார்கள், யார் அமைதியை நிலைநாட்ட முயல்கிறார்கள் என்பதில் பெரும் குழப்பமே உருவாக்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாட்டின் நிலைப்பாட்டிலும், நட்புறவிலும் விரிசல் ஏற்படத் துவங்கியுள்ளது.
உதாரணமாக அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுக்கத் தயாராக இருக்கும் வேளையில், ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போரில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. யெமன் நாட்டில் ஹவுதி படைகளைத் தாக்கி வரும் சவுதி அரேபியா, அமெரிக்கா - ஈரான் போரில் அமைதிக்குத் திரும்பி எண்ணெய் வர்த்தகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இப்படி ஒவ்வொரு போரிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை உலக நாடுகள் கொண்டு உள்ளது.
இதற்கிடையே, ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதே பதிவில், அமெரிக்கா, ரஷ்யா தரப்பில் இந்த போரை நிறுத்த விரும்பினாலும், இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரும்பவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது, அந்நாட்டின் பெரும் பகுதியை ரஷ்யா கைப்பற்றியிருக்கும் வேளையில் உக்ரைன் நாட்டில் ஆண்கள் மக்கள் தொகை பெரிய அளவில் குறைந்துள்ளது, எஞ்சியிருக்கும் ஆண்களும் போர் மற்றும் குண்டு வெடிப்பு காரணமாகக் காயம் அடைந்தோ, உடல் பாதிப்பு ஏற்பட்டோ உள்ளனர் என தெரிவித்தார்.
என்னுடைய திட்டம் மிகவும் எளிதானது, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த வேண்டும், பேச்சுவார்த்தை நிலையில் இருந்து ரஷ்யாவை எக்காரணத்தைக் கொண்டும் இழந்துவிடக்கூடாது என்பதே. இந்த முயற்சியில் தற்போது பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

