ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்றும் நாளையும், இரு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வரும் வேளையில், பிரதமர் மோடி அவரை நேரில் அழைப்பது முதல் இரவு விருந்து வரையில் தடல்புடலாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதோடு புடினின் இந்த பயணத்தில் இரு நாடுகள் மத்தியில் சுமார் 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படும் நிலையில், உலக நாடுகளின் கவனம் தற்போது இந்தியா பக்கம் திரும்பியுள்ளது.
புடினின் இந்திய பயணத்தில் முக்கியமான நோக்கம் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டிசம்பர் 4ஆம் தேதி மாலையில் இந்தியாவுக்கு வருகிறார். புடினின் இந்திய பயணம் மிகவும் முக்கியமானது, காரணம் ரஷ்யா - உக்ரைன் மோதல் 2022ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு முதல் முறையாக இந்தியா வருகிறார் என்பதால் கூடுதல் ஸ்பெஷல். மேலும் மோடி - புடின் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக உள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றிருந்தார்.

புடினின் இந்திய பயணம் மற்றும் இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் சுமார்10 அரசு ஒப்பந்தங்களும், 15 வணிக ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் ரஷ்யாவுக்கான இந்திய இறக்குமதியை விரிவாக்குவது குறித்து ரஷ்யா அதிகம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் உடனான போருக்கு பின்பு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு வர்த்தக தடைகளை விதித்துள்ள காரணத்தால் ரஷ்யா தனது நடப்பு நாடுகள் உடன் அதிகப்படியான வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதனால் ரஷ்யா சமீபகாலமாக இந்தியா, சீனாவுடன் பொருளாதார இணைப்பை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருவது கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது.
மோடி - புடின் சந்திப்பில் கையெழுத்திடப்படும் 25 ஒப்பந்தங்கள் மருந்து, விவசாயம், விவசாயப் பொருட்கள், உரங்கள், இயந்திரப் பொருட்கள், ஐடி துறைகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு இந்தியாவும், ரஷ்யாவும் நீண்ட காலமாக இணைந்து செயல்படும் அணு சக்தி, விண்வெளி துறைகளிலும் புதிய முதலீடுகள், கூட்டணி முயற்சிகளை செயல்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் எனர்ஜி தேவையை தீர்க்க ரஷ்யா இந்தியாவில் சிறு அணு உலைகளை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம், இந்திய அரசும் நீண்ட காலமாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
புடினின் இந்திய பயணத்தில் அவருடன் 7 அமைச்சர்கள், பெரிய வணிக குழு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்டோர் புடின் உடன் இந்திய வர உள்ளனர். இந்த உச்சி மாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை எப்போதும் இல்லாமல் பெரிய அளவில் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.
புடின் டிசம்பர் 4ஆம் தேதி மாலை டெல்லி வருகிறார், இதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரைவேட் டின்னர்-ல் கலந்துக்கொள்கிறார். டிசம்பர் 5ஆம் தேதியன்று ராஷ்டிரபதி பவனில் அரசுமுறை வரவேற்பு, அதை தொடர்ந்து ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்த உள்ளார். இறுதியாக டெல்லியில் இருக்கும் ஹைதராபாத் ஹவுஸில் உச்சி மாநாடு நடக்கும். மாநாடு நடந்து முடிந்த உடன் 5ஆம் தேதி மாலையே புடின் ரஷ்யா புறப்படுகிறார்.


Click it and Unblock the Notifications