இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை, முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சௌத்ரி சரண் சிங் மற்றும் விவசாய விஞ்ஞானியும், இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாஜக அரசு இன்று அறிவித்துள்ளது.
கடந்த மாதம் பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. இதில் நரசிம்ம ராவ் அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது மூலம் பிஜேபி அரசு பெருமை கொள்வதாகப் பிரதமர் டிவிட்டரில் தெரிவித்தார்.

யார் இந்த நரசிம்மராவ்: இந்தியாவின் பொருளாதாரம் தாராளமயமாக்கலின் போதும், பெரும் பலத்தைத் சேர்த்தது மட்டும் அல்லாமல் தாராளமயமாக்கல் பணிக்குத் தலைமை தாங்கினார் பிவி நரசிம்மராவ்.
ஜூன் 28, 1921 இல் தெலுங்கானா மாநிலத்தில், பி.ரங்கா ராவுக்கு மகனாகப் பிறந்தார் நரசிம்மராவ். கல்லூரி படிப்பை ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார்.
விவசாயம் குடும்பத்தில் பிறந்து, சட்டம் படித்த பிவி நரசிம்மராவ் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதன் வாயிலாக அரசியலுக்குள் நுழைந்தார். பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்தார் மற்றும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல் போட்டிப்போட்டு பெரும் வெற்றியைப் பெற்றவர்.
பிவி நரசிம்மராவ் அவர்கள் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சராக இருந்த போது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டிருந்தார். Non-Aligned Movement மற்றும் காமன்வெல்த் எனப் பல கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூடுதலாக, அவர் உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் பல கூட்டுக் கமிஷன்களுக்குத் தலைமை தாங்கினார்.
1991ல் நரசிம்மராவ் இந்தியாவைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே கொண்டு வந்தது எப்படி?
பிவி.நரசிம்மராவ் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்தார். இந்தியா 1990-91 காலகட்டத்தில் கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது, அதனால் உலக நாடுகளிடம் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் திவாலாகும் நிலையில் தத்தளித்தது. அந்தக் காலகட்டத்தில் என்ன ஆனது..?
1990-91 வளைகுடாப் போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பெரிய அளவில் உயர வழிவகுத்துள்ளது. இதேவேளையில் வெளிநாட்டில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் இந்தியாவுக்குப் பணம் அனுப்புவதில் பெரும் சரிவு உருவானது.
இதன் விளைவாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பெரிய அளவில் குறைந்து வெறும் 6 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை அப்போது 90 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி பயன்படுத்தி வந்த நிலையில் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைந்தது. இதனால் அரசு வாங்கிய வெளிநாட்டுக் கடனைகளைத் திருப்பிச் செலுத்த முடியாத கட்டத்திற்கு நகர்ந்தது.
எந்த நிலையிலும் வெளிநாட்டுக் கடனைகளைச் செலுத்த முடியாமல் திவாலாகக் கூடாது, நாட்டின் பெருமைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என முடிவெடுத்த பிவி நரசிம்மராவ் இருமுக்கிய கொள்கை மாற்றத்தைக் கொண்டு வந்தார். ரூபாய் மதிப்பை குறைப்பது, தங்க இருப்பைக் குறைத்து அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பது ஆகிய இரு முடிவுகள் தான்.
இதைப் பிவி நரசிம்மராவ் அப்போதை நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தலைமையில் பல்வேறு மாற்றங்கள், கட்டண குறைப்புகளை அறிவித்து 1991 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புப் பட்ஜெட்-ஐ அறிவித்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுத்தார் பிவி நரசிம்மராவ்.


Click it and Unblock the Notifications