சென்னை முட்டுக்காடு பகுதியில் சர்வதேச தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் முட்டுக்காடு பகுதியில் சர்வதேச கலைஞர் பன்னாட்டு அரங்கம் , கோயம்புத்தூரில் மிகப்பெரிய நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வுகள் நடக்கும் மையமாக சென்னையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை அருகே ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் சர்வதேச பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 5.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த பன்னாட்டு அரங்கம் அமைய உள்ளது.

இந்த மையத்தில் 5 ஆயிரம் பேர் அமரும் வகையிலான அரங்கமும், 2000 பேர் அமரும் வகையிலான ஒரு ஆடிட்டோரியமும் ,ஒரு கண்காட்சி அரங்கமும் அமைக்கப்படவுள்ளது. அது மட்டும் இன்றி திறந்தவெளி தியேட்டர், உணவகம் , 10,000 வாகனங்கள் நிறுத்தும் வகையிலான வாகன நிறுத்தம் ஆகியவையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 525 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பணிகளை நான்கு பிரிவுகளாக பிரித்து ஒப்பந்த புள்ளி கோரி விரைவாகவும் நடத்தி முடிப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சர்வதேச பன்னாட்டு அரங்கத்தை பொறுத்தவரை உள்ளேயும், வெளியேயும் அமர்ந்து உண்ணக்கூடிய வசதிகள் கொண்டிருக்கும்.
அதேபோல பாங்கிட் ஹால்கள், டிக்கெட் கவுண்டர்கள், மருத்துவ மையம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. இவை அனைத்துமே சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது மதுரையில் இருப்பதைப் போன்ற கலைஞர் நூற்றாண்டு நூலகம் கோயம்புத்தூரிலும் அமைக்கப்பட உள்ளது. இந்த மிகப்பெரிய நூலகம் மற்றும் ஆய்வு மையமானது 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனுப்புரப்பாளையம் பகுதியில் அமைய இருக்கிறது.
இங்கே குழந்தைகளுக்கான தியேட்டர்கள், புத்தக பிரிவுகள், மக்கள் சொந்தமாக எடுத்துச் செல்லும் புத்தகங்களை படிப்பதற்கான பகுதிகள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. மொத்தம் ஆறு அடுக்குகளைக் கொண்டதாக இந்த நூலகம் அமைய இருக்கிறது என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கேபி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
துபாய் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருப்பதைப் போன்ற ஒரு பிரம்மாண்டமான அதிநவீன வாசிகள் கொண்ட நூலகமாக இது இருக்கும் என கூறியுள்ளார். 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இவை அமைக்கப்பட உள்ளன. இதில் 50 கோடி ரூபாய் புத்தகங்கள் மற்றும் இ- புத்தகங்கள் கொள்முதலுக்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
5 கோடி ரூபாய் இந்த நூலகத்திற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு வசதிகள் கொண்ட ஒரு நூலகமாக இது அமையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த பணிகள் முழுமை பெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
story written by: Devika


Click it and Unblock the Notifications