காசிம் இப்ராஹிம் என்ற புருமா காசிம்மின் வெற்றிக் கதை இளைய தலைமுறையினருக்கு மிகுந்த உத்வேகத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. 1951 ஆம் ஆண்டில் மாலத்தீவில் பிறந்த காசிம் ஒரு கிளார்க்காக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது அவரது வயது 18.
அவரது வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள் வந்து சென்றன. இருப்பினும் அவரது அயராத உழைப்பினால் சிறந்த தொழிலதிபராகி இப்போது மாலத்தீவின் டாப் பணக்காரராக காசிம் விளங்குகிறார்.

1973 ஆம் ஆண்டில் தனது கிளார்க் வேலையை விட்ட காசிம் ஒரு பர்னிச்சர் கடையைத் தொடங்கினார். அத்துடன் ஒரு அரசு டிரேடிங் கம்பெனியில் பகுதி நேர வேலையும் பார்த்து வந்தார். அப்போதுதான் தானும் சுயமாக ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் காசிமுக்குத் தோன்றியது.
இதைத் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டில் காசிம் ஒரு டிரேடிங் கம்பெனியை ஆரம்பித்தார். அதில் அரிசி, புகையிலை, டீசல், கெரசின் ஆகிய பொருட்களை வர்த்தகம் செய்து வந்தார். அவரது தொழில் ஆர்வத்தினால் காசிம்மின் வியாபாரம் பல்வேறு துறைகளில் விரிவு ஆனது. டிராவல் மற்றும் டூரிஸம், டிரான்ஸ்போர்ட், கன்ஸ்ட்ரக்ஷன், மேனுபாக்சரிங், கேஸ், சிமெண்ட் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டார்.
அவரது நிறுவனமான வில்லா ஷாப்பிங் அண்டு டிரேடிங் விரைவிலேயே வளர்ச்சியடைந்து மாலத்தீவின் தொழில் உலகத்தில் பெரிய அளவில் உருவெடுத்தது. இந்த நிலையில் அவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 2000 டாலர்கள் கடன் பெற்று தொழிலை விரிவு படுத்தினார். அவரது முக்கிய பேங்கராக இப்போது வரை எஸ்பிஐ விளங்குகிறது.
ஒரு பழைய படகை மாற்றியமைத்து மீன் பிடிப்பு மற்றும் கார்கோ ஷிப்பிங்கை நடத்தினார். பின்னர் எண்ணெய் இறக்குமதி தொழிலை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அவரது நிறுவனம் பல துறைகளில் அடியெடுத்து வைத்தது.
80களின் கடைசியில் காசிம் அரசியலில் நுழைந்தார். 1989 ஆம் ஆண்டு அவர் மாலத்தீவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடு காரணமாக சிறையிலடைக்கப்பட்ட போதும் காசிம் சோர்ந்து விடவில்லை.
2005 ஆம் ஆண்டில் அவர் பேங்க் ஆப் மாலத்தீவின் கவர்னராக பதவி வகித்தார். இப்போது காசிம்மின் வில்லா குரூப்பின் சந்தை மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 9.63 பில்லியன் மாலத்தீவு ரூபாய் ஆகும்.
காசிம் இப்ராஹிமின் கதை பலருக்கும் ஒரு உத்வேகமாக விளங்குகிறது. அவரது அர்ப்பணிப்பு மற்றும் சாதுர்ய முடிவுகளால் ஒருவர் சவால்களை சமாளித்து குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.


Click it and Unblock the Notifications