மத்திய கிழக்கு நாடான கத்தார் இதுவரையில் எந்தொரு விளையாட்டுப் போட்டிக்கும், நிகழ்ச்சிக்கும் செலவு செய்திடாத வகையில் FIFA உலகக் கோப்பை 2022-க்கு பார்த்து பார்த்து செய்துள்ளது.
FIFA உலகக் கோப்பை போட்டிக்காகவும் அதன் ஏற்பாடுகளுக்காகவும் சுமார் 220 பில்லியன் டாலர்களைச் செலவிட்டு உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.
இந்தப் பெறும் திட்டத்தின் கட்டுமானத்திற்காகவும், நிர்வாகத்திற்காகவும், புட்பால் ரசிகர்கள் மூலம் உருவாக்கும் வர்த்தகத்திற்காகவும் உலகின் பல நாடுகளில் இருந்து ஊழியர்கள் கத்தார் நாட்டில் பணியில் அமர்த்தப்பட்டனர். தற்போது இவர்களின் நிலை என்ன..?
FIFA உலகக் கோப்பை
நவம்பர் 20 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் FIFA உலகக் கோப்பை போட்டிகள் துவங்கப்பட்ட நிலையில், பல நாடுகள் எப்படியாவது வெல்ல வேண்டும் எனக் கனவுடன் வந்தாலும் இறுதிக் கட்டத்திற்கு வந்தது அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தான்.
லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினா அணி தலைவர் லியோனல் மெஸ்ஸி -யின் நீண்ட காலக் கனவு ஞாயிற்றுக்கிழமை நனவாகியது. 34 வருடத்திற்குப் பின் அர்ஜென்டினா உலகக் கோப்பை வென்றுள்ளது. ஆனால் இந்தப் போட்டியை பிரான்ஸ் அணி மிகவும் கடுமையாக்கியது ஒப்புக்கொள்ள வேண்டும்.
கடும் போட்டி
90 நிமிடத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல் அடித்தது, நீட்டிக்கப்பட்ட 30 நிமிடத்தின் முடிவில் 3-3 கோல் அடித்தனர். அர்ஜென்டினா சில பதட்டமான தருணங்களில் தப்பிப்பிழைத்து 4-2 பெனால்டி ஷூட் அவுட்டில் நடப்பு சாம்பியனான பிரான்சுக்கு எதிராகப் போராடி வெற்றியைப் பதிவு செய்தது.
வெளிநாட்டு ஊழியர்கள்
FIFA உலகக் கோப்பை போட்டிகளுக்காகக் கத்தார் அரசு சுமார் 8 மைதானங்களைக் கட்டியது. இந்த எட்டு மைதானங்களில் பலவற்றைக் கட்டுவதற்கும் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை -யைச் சேர்ந்த தொழிலாளர்கள் கத்தார் நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர்.
லுசைல் மைதானம்
ஆனால் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்ற லுசைல் மைதானத்தைக் கட்டிய தொழிலாளர்களின் புகைப்படத்தைப் போட்டி தொடங்குவதற்குச் சற்று முன்பு அதன் சுவர்களில் இருந்து அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
கத்தார்
கத்தார் நாட்டிற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு FIFA உலகக் கோப்பை போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டதில் இருந்தே அந்நாட்டில் தொழிலாளர் உரிமைகள் குறித்து உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு மக்கள்
கத்தார் நாட்டின் 2.9 மில்லியன் மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு மக்கள் தான். இப்படி வெளிநாட்டில் இருந்து கத்தார் நாட்டிற்குத் தொழிலாளர்களாக வருவோர் அவர்கள் தங்கும் நிலைமை குறித்துப் பல கண்டிப்புகள் உலகளவில் வெடித்தது.
தொழிலாளர் இறப்பு
இதுமட்டுமா கத்தார் நாட்டில் FIFA உலகக் கோப்பை போட்டிகளுக்கான கட்டுமான திட்டங்கள் முதல் பல்வேறு மெகா திட்டங்களில் தொழிலாளர் இறப்பு எண்ணிக்கை உண்மையாகக் காட்டப்படாமல் மிகவும் குறைவாகவே காட்டப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையானது.
கத்தார் அரசு
இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் நேரத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் கத்தார் அரசுடன் அந்நாட்டில் பணியாற்றி வரும் வெளிநாட்டு தொழிலாளர் நலன் குறித்துப் பேசப்பட்டது. இந்த நிலையில் கத்தார் அரசு விரைவில் இந்த நிலைமாறும் என்றும் அதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு உள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
350 மில்லியன் டாலர் தொகை
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சம்பளத்தைத் திருடப்பட்டு மற்றும் குறைக்கப்பட்ட ஊதியத்திற்கான நிதி ஏற்கனவே 350 மில்லியன் டாலர் தொகையைக் கத்தார் அரது கொடுத்துள்ளது. மேலும் காயங்கள் மற்றும் இறப்புகளுக்கு ஈடுசெய்யவும் கத்தார் அரசு முடிவு செய்துள்ளது.
புட்பால் ஸ்டார்
கத்தார் FIFA உலகக் கோப்பை போட்டி மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, ம்பாப்பே, வெற்றி, தோல்வி, சாதனை ஆகியவற்றைத் தாண்டி தொழிலாளர் மீது கத்தார் நிறுவனங்களின் உரிமை மீறல்கள் பெரியதாகத் தெரிகிறது.
பணிநீக்கம்
இதேவேளையில் பல தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த வெளிநாட்டு ஊழியர்கள் இந்தக் கத்தார் FIFA உலகக் கோப்பை போட்டிக்கு பின்பு பணியை இழக்கும் அபாயமும் உள்ளது. இதேவேளையில் உலக நாடுகளில் பொருளாதார மந்த நிலை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications