கத்தார் முதலீட்டு ஆணையம் இந்தியாவில் அலுவலகத்தை நிறுவி 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
கத்தார் நாட்டு தலைவர் ஷேக் தமீம் பின் அமத் அல் தானி இரு தினங்களுக்கு முன்னர் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்த இவர் இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியா வந்தார். இவரை பிரதமர் மோடியே நேரடியாக சென்று விமான நிலையத்தில் வரவேற்றார்.

தன்னுடைய இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக ஷேக் தமீம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழில்துறை கூட்டமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் என பலரையும் சந்தித்து பேசினார். அப்போது கத்தார் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான வர்த்தக உறவையும் ராஜாங்க ரீதியான உறவையும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அப்போது கத்தார் அரசு தங்களுடைய கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி எனப்படும் கத்தார் முதலீட்டு ஆணையத்தின் அலுவலகத்தை இந்தியாவில் நிறுவ இருப்பதாகவும் இந்த அலுவலகம் வாயிலாக 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கத்தார் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் இடையிலான உறவு வலுவடைந்து வருவதாக கூறியுள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருக்கும் இத்தகைய சூழலில் கத்தார் அரசு தங்களுடைய முதலீட்டு ஆணையத்தின் அலுவலகத்தை இந்தியாவில் நிறுவ முன் வந்திருப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கத்தார் மேற்கொள்ள இருக்கும் முதலீடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட்டன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஷேக் தமீம் இடையிலான சந்திப்பின்போது இரு தலைவர்களும் எதிர்காலத்தில் இரு நாடுகளும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கத்தார் முதலீட்டு ஆணையம் என்பது 2005 ஆம் ஆண்டு கத்தார் நாட்டு அரசால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பானது 526 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியை மேலாண்மை செய்து வருகிறது.
நிறுவப்பட்டதிலிருந்து தற்போது வரை இந்த ஆணையும் பல்வேறு துறைகளிலும் பல்வேறு நிறுவனங்களிலும் முதலீட்டினை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கத்தார் முதலீட்டு ஆணையம் பார்க்கலைஸ் வங்கி, ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் என பல்வேறு துறைகளில் இயங்கக்கூடிய நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடு செய்து வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications