எல்என்ஜி உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் கத்தார் எனர்ஜி, தனது எல்என்ஜி உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளது. ராஸ் லஃபான் தொழில்துறை நகரம் மற்றும் மெசைட் தொழில்துறை நகரத்தில் உள்ள தனது தொழிற்சாலைகள் மீது நடந்த ஈரான் தாக்குதல்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கத்தார் எனர்ஜி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் அறிக்கையின்படி, "ராஸ் லஃபான் தொழில்துறை நகரம் மற்றும் மெசைட் தொழில்துறை நகரத்தில் இயங்கி வரும் எங்கள் தொழிற்சாலைகள் மீது நடந்த ராணுவ தாக்குதல்களால், எல்என்ஜி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் எனர்ஜி தனது அனைத்து பங்குதாரர்களுடனும் தொடர்பில் இருப்பதாகவும், சமீபத்திய தகவல்களை தொடர்ந்து தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கத்தார் உலகின் மிகப்பெரிய எல்என்ஜி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் ஒன்று. இந்த உற்பத்தி நிறுத்தம் உலக எல்என்ஜி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது இயற்கை எரிவாயு விலையை உயர்த்தலாம். இந்தியா போன்ற எல்என்ஜி இறக்குமதியை அதிகம் சார்ந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறலாம்.
இந்த சம்பவம் உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் எனர்ஜி தனது வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக உறுதியளித்துள்ளது.
உலக எரிசக்தி சந்தை இப்போது பெரும் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் நிலையில் உள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் இந்த நிலைமையை கவனமுடன் அவதானித்து வருகின்றனர்.
ஒருப்பக்கம் கச்சா எண்ணெய் உற்பத்தியை OPEC கூட்டணி நாடுகள் அதிகரித்தாலும் ஹோர்மூஸ் நீர் வழிபாதையில் நடக்கும் ஈரான் தாக்குதல் சர்வதேச சந்தைக்கு வரும் கச்சா எண்ணெய் குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு என அனைத்தும் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications