இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு பிரிவாக மாறி இருக்கிறது. முதலில் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் உணவு டெலிவரியில் கால் பதித்தன. இதனை அடுத்து செப்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்கள் வீட்டிற்கு தேவையான நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பால் மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரியில் களம் இறங்கின.
நமக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நம் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து 10 நிமிடங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை இந்தியாவில் உருவாகி இருக்கிறது. குறிப்பாக நகர் புறங்களில் குயிக் காமர்ஸ் செயலிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தாண்டி குயிக் காமர்ஸ் பிரிவின் அடுத்த இலக்கு குழந்தைகளுக்கான பொருட்கள் என தெரிய வந்திருக்கிறது.

அண்மையில் கவி (Cavi) என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை 30 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்வது தொடர்பான சேவையில் இறங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் தன்னுடைய இந்த தொழிலுக்காக 4 மில்லியன் டாலர்கள் வரை முதலீட்டை திரட்டி இருக்கிறது . அதேபோல ஓஸி (OZI) என்ற ஒரு நிறுவனமும் குழந்தை பராமரிப்பு பொருட்களை டெலிவரி செய்வதற்கான செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறது, இந்த நிறுவனமும் அண்மையில் ப்ளூ வென்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெருமளவிலான தொகையை நிதியாக திரட்டி உள்ளது.
பல்வேறு முதலீட்டு நிறுவனங்களும் இந்த பிரிவில் முதலீடு செய்வதால் அடுத்த சில ஆண்டுகளில் குழந்தைகளுக்கான பொருட்களை உடனடியாக டெலிவரி செய்யக்கூடிய செயலிகளின் தேவையும் பயன்பாடும் அதிகளவில் அதிகரிக்கும் என்பதையே உணர்த்துகிறது. ஸ்டெல்லாரிஸ் வென்ச்சர்ஸ், ப்ளூ வென்ச்சர்ஸ் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்கள், இதுபோல குயிக் காமர்ஸ் பிரிவில் குழந்தைகளுக்கான பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களை தேடி தேடி முதலீடு செய்வதாக மணி கண்ட்ரோல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
கவி மற்றும் ஓஸி ஆகிய நிறுவனங்கள் மட்டுமில்லாமல் ஜாடல் (Zoddle ) என்ற நிறுவனம் அனைத்து விதமான குழந்தை பராமரிப்பு பொருட்களும் நீங்கள் ஆர்டர் செய்த 60 நிமிடங்களுக்குள் உங்களை வந்து சேர்ந்து விடும் என்ற கருத்தாக்கத்துடன் தன்னுடைய தொழிலை தொடங்குவதற்கான நிதி திரட்டலில் ஈடுபட்டு இருக்கிறது. தொடக்கத்தில் பிக் பாஸ்கெட் ,ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், செப்டோ, பிளிங்கிட் நிறுவனங்களில் முதலீடு செய்ய தவறிய முதலீட்டு நிறுவனங்கள் தற்போது குயிக் காமர்ஸ் பிரிவில் காலடி எடுத்து வைக்கும் நிறுவனங்களை தேடி தேடி முதலீடு செய்கின்றன


Click it and Unblock the Notifications