முன்பெல்லாம் பணத் தேவை ஏற்பட்டால் பிறரிடம் கடன் பெற்றுக் கொண்டு அதை திருப்பிச் செலுத்தி வந்தனர். அதன் பிறகு நகைகள் வைத்திருந்தால் அதை அடமானம் வைத்து பணம் பெற்றனர். அடுத்தபடியாக வங்கிகளில் கிடைக்கும் பர்சனல் லோனுக்கு மாறினர். ஆனால் இப்போது அதை எல்லாம் விட்டு தங்கள் ஸ்மார்ட்போனிலேயே இன்ஸ்டன்ட் லோன் ஆப் மூலம் உடனடி லோன் பெற்று வருகின்றனர்.
வங்கிகளுக்கு சென்றால் கூட அவ்வளவு எளிதில் லோன் கிடைத்து விடாது. அங்கு செய்யப்படும் ஆவண வேலைகள் மற்றும் செயல்முறைகள் எல்லாம் முடிந்த பின்னரே கைக்கு பணம் கிடைக்கும். ஆனால் இன்ஸ்டன்ட் லோன் ஆப்களில் ஒரு சில நிமிடங்களில் லோன் பெறலாம். இதை வாங்கும் சிலர் அதன் பின்னால் மறைந்திருக்கும் கட்டணங்கள் மற்றும் பிற விஷயங்களைக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அது என்ன என்பதைப் பார்ப்போம்.

கடன் பெறுவதற்கு முன்பு சரிபார்க்கப்பட வேண்டிய விஷயங்கள்: நீங்கள் இன்ஸ்டன்ட் லோன் ஆப்-பில் லோன் பெறுவதற்கு முன்பு யார் அந்த கடன் வழங்குனர்?, கடன் காலம் முடிந்த பிறகு நீங்கள் மொத்தமாக எவ்வளவு செலவு செய்திருப்பீர்கள்? அந்த ஆப் உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்யப்பட்டால் எந்தெந்த தகவல்களை அணுகும்? என்ற எல்லா விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். கடன் வழங்கும் இன்ஸ்டன்ட் லோன் ஆப் இந்த விஷயங்களை எல்லாம் கடன் பெறுவதற்கு முன்னரே உங்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இன்றெல்லாம் செய்திகளில் லோன் ஆப்-பில் சிக்கி வட்டி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பல நிகழ்வுகளை பார்த்து வருகிறோம். எனவே ஒரு லோன் ஆப்பை தேர்வு செய்வதற்கு முன்பு இது போன்ற விஷயங்கள் அனைத்தையும் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
ஆர்பிஐ அங்கீகாரம்: கடன் பெறுபவர்கள் ஆர்பிஐ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கப்படுகிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். இதை தெரிந்து கொள்ள ஆர்பிஐ ஒரு பொதுப் பட்டியலை உருவாக்கியுள்ளது. 2025-ஆம் ஆண்டின் ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்த பட்டியல் செயல்பாட்டிலும் உள்ளது. அதை வைத்தும் நீங்கள் எந்தெந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆர்பிஐ அங்கீகாரம் பெற்று இன்ஸ்டன்ட் லோன் ஆப் மூலம் லோன் வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விளம்பரத்தில் வரும் வட்டியை நம்பக் கூடாது: ஒரு ஆப் குறைந்த வட்டி விகிதத்தில் லோன் தருவதாக அட்வர்டைஸ்மென்ட் செய்யலாம். ஆனால் இதை பார்த்து மயங்கி விண்ணப்பிக்க கூடாது. லோன் பெறுவதற்கு முன்பு உண்மையான வட்டி விகிதம் என்ன?, பிராசசிங் கட்டணம் என்ன? என்ற எல்லா விவரங்களையும் கவனிக்க வேண்டும்.
கீ ஃபேக்ட் ஸ்டேட்மெண்ட்: கீ ஃபேக்ட் ஸ்டேட்மெண்ட்டில் (KFS) கடன் தொடர்பான எல்லா விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கண்டிப்பாக தங்களுடைய வருடாந்திர வட்டி விகிதத்தை தெளிவாக சொல்ல வேண்டும். அதோடு கண்டிப்பாக கடன் தொடர்பான எல்லா விவரங்களையும் கொண்ட KFS ஸ்டேட்மெண்ட்டை வழங்க வேண்டும் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது.
செலவுகளை சரிபாருங்கள்: அபராதக் கட்டணம், இன்சூரன்ஸ். தாமதக் கட்டணம் என முன்கூட்டியே கடன் தொடர்பான செலவுகளைச் சரி பார்க்க வேண்டும். KFS ஸ்டேட்மெண்ட்டை பொறுத்தவரையில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படாத எந்த ஒரு கட்டணத்தையும் நீங்கள் கடன் பெற்ற வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ உங்களிடம் வசூலிக்க முடியாது.
ஒரு சில லோன் ஆப்-கள் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி கூட லோன் பெறலாம். ஆனால் ஒரு சில ஆப் வழக்கத்திற்கு மாறாக வட்டி வசூலிப்பதாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் சில போலி ஆப்களில் ஒவ்வொரு ஆண்டும் 200 முதல் 700 சதவீதம் வரையிலான வட்டி வசூலிக்கப்படுகிறது.
நம் ஊரில் எப்படி மீட்டர் வட்டி, கந்து வட்டி போன்றவற்றையெல்லாம் கட்டி மக்கள் பிரச்சினையில் சிக்குவார்களோ அதைவிட இது அதிகம். எனவே இது போன்ற லோன்களில் உஷாராக இருக்க வேண்டும். அதோடு கடனை கொடுத்துவிட்டு வாங்கிய கடனை இத்தனை நாட்களுக்குள் திருப்பி செலுத்தியாக வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து பணம் வாங்கியவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் வேறு வழியின்றி இன்னொரு லோன் ஆப்-பில் லோன் பெறும் சம்பவங்களும் நிகழத்தான் செய்கிறது. எனவே எப்போது கடன் பெற வேண்டுமானாலும் நன்கு யோசித்து ஆர்பிஐ அங்கீகாரம் பெற்ற அப்ளிகேஷனா என்பதைப் பார்த்து அதன் பிறகு முடிவெடுங்கள்.


Click it and Unblock the Notifications

