சென்னை: கேரளாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் பணிச்சுமையால் உயிரிழந்திருப்பது இளம் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த அன்னா செபஸ்டியன் என்ற 26 வயது பட்டய கணக்காளர் புனேவில் இருக்கும் எர்னெஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திடீரென அவர் உயிரிழந்த நிலையில் பணிச்சுமையே அவரது உயிரிழப்புக்கு காரணம் என அவரது தாயார் அனிதா குற்றம் சாட்டியுள்ளார்.
பணிக்கு சேர்ந்த 4 மாதங்களிலேயே தன்னுடைய மகளை இழந்து விட்டு தவிக்கிறார் தாயார். இது தொடர்பாக எர்னெஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் தலைவருக்கு அன்னா செபஸ்டியனின் தாயார் அனிதா எழுதியுள்ள கடிதம் பல்வேறு விவாதத்தை எழுப்பியுள்ளது.

பணிச்சுமை அன்னா செபஸ்டியனை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மிகப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. பலரும் தங்கள் நிறுவனங்களில் பணிச்சுமை அதிகரித்து அதனை கோபமாக வெளிப்படுத்துவார்கள், சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி அதனை வெளியில் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் இவை அனைத்துமே ஒருவருடைய உடலுக்கும் மனதுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது மறைமுகமாக அவர்களின் இறப்புக்கும் காரணமாகி விடுகிறது என்பது தான் உண்மை.
HBR Guide to Crafting Your Purpose எனும் நாவலின் எழுத்தாளர் ஜான் கோல்மேன் ( John Coleman), பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்களது வேலையை விட்டு விடுங்கள் இல்லை எனில் நீங்களே இருக்க மாட்டீர்கள் என கூறியுள்ளார்.
1. உறக்கத்தை பறிக்கும் வேலை: சரியான நேரத்திற்கு உறங்காமல் இரவிலும் வேலை செய்வது, அடிக்கடி தலை வலிப்பது, எப்பொழுதும் சோர்வாகவே இருப்பது, இவை அனைத்துமே உங்களது வேலை உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நெகட்டிவ்வான பாதிப்பை ஏற்படுத்துகிறது என அர்த்தம்.
2. உரிய மதிப்பு கிடைக்காமல் போவது: உங்களுடைய நிறுவனத்திற்கு முழுமையான பங்களிப்பை வழங்குகிறீர்கள் ஆனால் அதற்கு உரிய ஊதியம் உங்களுக்கு கிடைக்கவில்லை அல்லது உங்களது வேலை மதிக்கப்படவில்லை என நீங்கள் உணர்ந்தால் உடனடியாக அந்த வேலையை விட்டு விட வேண்டுமாம்.
3. பாராட்டாத மூத்த அதிகாரிகள்: உங்கள் வேலையை பாராட்டாமல் மூத்த அதிகாரிகள் தவிர்க்கிறார்கள் எனும் போது அதுவே பெரிய அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறதாம். மூத்த அதிகாரிகள் பாராட்டும் போது இந்த வேலையை இன்னும் திறம்பட செய்ய வேண்டும் என்ற ஒரு உத்வேகம் உண்டாகும் ஆனால் உங்களது மூத்த அதிகாரி உங்களை பாராட்டவில்லையெனில் அந்த வேலையை விட்டுவிட வேண்டுமாம்.
4. விடுமுறை நாட்களில் கூட வேலை: மூத்த அதிகாரி உங்களுக்கு அதிக வேலை வழங்குகிறார். விடுமுறை நாட்களில் கூட வேலை வழங்குகிறார். பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகும் கூட அடிக்கடி போன் செய்து வேலை வழங்குகிறார் என்பன உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அந்த வேலையை விட்டு வருவது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.
5. வேலைக்கு செல்லவே வெறுப்பு: வேலைக்கு செல்ல வேண்டும் என நினைக்கும் போதே ஒரு வித அச்சம் மற்றும் வெறுப்பு உணர்வு ஏற்படுகிறது என்றால் உடனடியாக அந்த வேலையை விட்டு விட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
6. சொந்த வாழ்க்கையில் கவனமின்மை: உங்களுடைய வேலை காரணமாக சொந்த வாழ்க்கையில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் திட்டமிட்ட பணிகளை செய்ய முடியாமல் போவது, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் போவது என்பன உள்ளிட்டவை இருந்தால் அந்த வேலையை மாற்றிவிட வேண்டுமாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications