தமிழ் மற்றும் இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நடிகர் ஆர். மாதவன். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் படங்கள் இயக்கம், தொழில்களில் முதலீடு என பல விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறார். அண்மையில் இவர் துபாய்க்கு குடி பெயர்ந்துள்ளார்.
படங்களில் நடித்து கொண்டிருக்கும் மாதவன் திடீரென துபாயில் ஏன் செட்டிலானார் என பரவலாக பேச்சுகள் எழுந்தன. அதற்கு அவரே ஒரு பேட்டியில் பதிலும் தந்திருக்கிறார். மாதவனின் மகன் வேதாந்த், ஒரு திறமையான நீச்சல் வீரர். கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது இந்தியாவில் நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. எனவே வேதாந்த் நீச்சல் பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக அவரை துபாய்க்கு அழைத்து சென்றாராம்.

கொரோனா நேரத்தில் இந்தியாவிலும் மும்பையிலும் நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகள் நீச்சல் குளங்களை திறந்து வைத்து, வீரர்களுக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தன. வேதாந்தின் சர்வதேச நீச்சல் கனவு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, துபாய்க்கு சென்று மகனுக்கு பயிற்சி தந்ததாகவும் தற்போது அங்கேயே குடிபெயர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
துபாயில் வசிக்க தொடங்கினாலும், தனது இந்திய அடையாளத்தையும் கடமையையும் தான் ஒருபோதும் மறக்கவில்லை என கூறியுள்ள மாதவன், தான் துபாயில் வசித்தாலும், தனது அனைத்து வரிகளையும் இந்தியாவிலேயே முறையாக செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
துபாயின் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது என கூறியுள்ள மாதவன், கூகுள் மேப் ஒவ்வொரு வாரமும் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டிய அளவுக்கு புது புது சாலைகளை போடுகின்றனர் என பாராட்டியுள்ளார். துபாயின் எதிர்கால திட்டங்கள் வியக்க வைக்கின்றன என கூறும் மாதவன் இங்கே ஒரு காபி பிஸ்னஸை தொடங்க போவதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஃபில்டர் காபியை அடிப்படையாக கொண்டு துபாயில் ஒரு பிஸ்னஸ் தொடங்கும் திட்டம் இருப்பதாகவும் மாதவன் கூறியுள்ளார். துபாயில் எங்கு சென்றாலும் இந்தியாவில் கிடைப்பது போன்ற ருசியில் ஃபில்டர் காபி கிடைப்பதில்லை என தெரிவித்துள்ள மாதவன் அதனையே ஒரு பிஸ்னஸாக தொடங்க இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் கிடைக்கும் அதே ருசியில் துபாயில் ஃபில்டர் காபி கிடைத்தால் பெரும் வரவேற்பை பெறும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் அவர் ஈடுபட்டிருப்பதாகவே தெரிகிறது. மாதவன் த்ற்போது 125 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவராக திகழ்கிறார்.
படங்களில் நடிப்பது, விளம்பரங்களில் தோன்றுவது ஆகியவை தாண்டி மாதவன், சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். Parent Geenee Inc என்ற குழந்தைகளுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு தொழில்நுட்பத்திலும் முதலீடு செய்துள்ளார். முன்னதாக தமிழ்நாட்டில் விவசாயம் ஒரு நிறுவனத்திலும் மாதவன் முதலீடு செய்திருந்தார். அவரே இதனை தன் இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications

