பெங்களூரு: என்னதான் நவீன காலத்திற்கு ஏற்ப புது புது தொழில்நுட்பங்களுடன் கார்கள் சந்தையில் வந்தாலும் ஒரு காலத்தில் இந்தியர்களின் பிரியமாக இருந்த பிரிமியர் பத்மினி காருக்கு நிகராகாது. அந்த காலகட்டத்தில் பலரும் தங்களுக்கு சொந்தமாக பிரிமியர் பத்மினி கார்களை வாங்க முடியாதா என ஏங்கிக் கொண்டிருந்தனர். தற்போது இருக்கக்கூடிய இளைஞர்களுக்கும் இந்த காரின் மீது மோகம் இருக்கிறது.
பெங்களூருவை சேர்ந்த ரச்சனா மகாடிம்மனே என்ற இளம் பெண் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர் . இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் ஒன்றரை லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இவர் புகழ்பெற்ற பத்மினி காரை அண்மையில் சொந்தமாக வாங்கி இருக்கிறார். குழந்தை பருவத்தில் இருந்து பிரிமியர் பத்மினி மீது தனக்கு காதல் உண்டு என கூறும் ரச்சனா மகாடிம்மனே இது என்னுடைய கனவு கார் என கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு எனக்கு மிகப்பெரிய பரிசை அளித்திருக்கிறது எனக் கூறி அவர் இந்த காரின் புகைப்படத்தையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை நம்ப முடியவில்லை என்னை நானே கிள்ளி பார்த்துக்கொள்கிறேன் நான் என்னுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய கனவு காரை வாங்கி இருக்கிறேன், குழந்தை பருவத்தில் இருந்து இந்த காரை ஓட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு என கூறி இருக்கிறார் .
பல மாதங்களாக இந்த காரை தான் தேடியதாகவும் பின்னர் ஒருவரிடம் இருந்து இந்த காரை வாங்கியதாவும் அவர் கூறியுள்ளார். காரை வாங்கும் போது அது பயன்படுத்தும் நிலையிலேயே இல்லை , ஆனால் அதனை சீரமைத்து புதிதாக பெயிண்ட் அடித்து தற்போது பயன்படுத்தும் வகையில் கொண்டு வந்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
தான் பத்மினி காரை ஓட்டும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். 1970 மற்றும் 1980களில் பிரிமியர் பத்மினி கார்கள் மிகவும் பிரபலமாக இருந்து வந்தன. தமிழகத்தில் கூட பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயரில் இந்த காரை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
பின்னர் கால ஓட்டத்தில் நவீன கார்களின் வருகையில் இந்த கிளாசிக் கார் நம்மை விட்டு மறைய தொடங்கியது. அப்படி ஒரு காரை வாங்கி தற்போது உயிர் கொடுத்து இருக்கிறார் ரச்சனா. அவருடைய இந்த பதிவுக்கு சமூக வலைத்தளவாசிகள் பலரும் பத்மினி கார் தொடர்பான தங்களின் நினைவலைகளை பகிர்ந்துள்ளனர்.
ஆடம்பர கார்கள் பின்னால் அனைவரும் சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்த காரை நீங்கள் வாங்கி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என ஒரு பயனர் கூறியுள்ளார். ஒருவர் பயனர் நான் இந்த காரில் தான் வாகனம் ஓட்டவே கற்றுக் கொண்டேன் எனக் கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications