மும்பை: முகேஷ் அம்பானியின் சம்மந்தியும், ராதிகா மெர்சண்டின் தாயாருமான ஷைலா மெர்சண்ட் மும்பையில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பை வாங்கியுள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர். இவரது இளைய சம்மந்தியான ஷைலா மெர்சண்ட் தெற்கு மும்பை பகுதியில் உள்ள பிரஸ்டீஜ் ஓசியன் டவரில் 2565 சதுர அடி மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை வாங்கியுள்ளார்.

இதன் மதிப்பு 20.76 கோடி ரூபாய் ஆகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 2,482 சதுர அடிக்கு வீடும் 83 சதுர அடிக்கு பால்கனியும் அமைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி இந்த வீட்டிற்கான ஆவணப்பதிவு நடைபெற்றிருக்கிறது. இந்த வீட்டில் 4 கார் பார்க்கிங் வசதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வீட்டினை பதிவு செய்யும்போது பதிவு கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் ஸ்டாம்ப் டூட்டியாக 1 கோடி ரூபாயும் செலுத்தப்பட்டிருக்கிறது.
பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய பிரஸ்டீஜ் குழுமம் தான் இந்த ஆடம்பர குடியிருப்பை கட்டி வழங்கியுள்ளது. ஒரு சதுர அடி 80 , 936 ரூபாய் என்ற விலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் பால்கனியிலிருந்து மும்பையின் கடல் அழகை ரசிக்கும் வகையில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி, இவருக்கும் என்கோர் ஹெல்த் நிறுவன தலைமை செயல் அதிகாரி வீரென் மெர்சண்ட் மற்றும் ஷைலா மெர்சண்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற்றது.
கடந்த மார்ச் மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் திருமண பார்ட்டிகள் நடைபெற்றன.உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் இந்த திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.
மும்பையில் ரியல் எஸ்டேட் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை வேகம் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
10 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட வீடுகள் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் இடைப்பட்ட காலத்தில் மட்டும் 8 சதவீதம் அளவுக்கு அதிகம் விற்பனை ஆகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது 12300 கோடி ரூபாய்க்கு ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை நடைபெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications