இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி அடைந்து வந்தாலும், உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டிற்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க நாட்டின் பொருளாதாரம் குறைந்தபட்சம் 8 சதவீத வேகத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார்.
ரகுராம் ராஜன் இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைக்கு பிள்ளையார் சுழி போட்டவர், நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அவர் தற்போது இந்திய மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகள் உருவாகாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியில் இந்திய மக்கள் தொகைக்கு தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்க நாங்கள் 8%-8.5% அளவிலான வளர்ச்சி பாதையில் இருக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் 6%-6.5% என்ற பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மிகவும் வலுவாக உள்ளது.
ஆனால் இந்தியாவின் வேலைவாய்ப்புகளின் தேவையுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் அதிகப்படியான இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர் என வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாக ரகுராம் ராஜன் பேசினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்ற பெரிய பொருளாதாரங்களை விட அதிகமாக இருந்த போதிலும், ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு சந்தையில் பல லட்சம் பேர் சேர்க்கப்பட்டாலும் இந்திய மக்களுக்கு போதுமான வேலைகள் உருவாக்கப்படவில்லை என்பது மோடி அரசின் மீது முக்கிய குற்றச்சாட்டாகவே உள்ளது.
அக்டோபர் மாதம் நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் மாதம் 10.05% ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகப்படியான அளவீடாக பார்க்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 7 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று HSBC மதிப்பிட்டு உள்ளது. இந்தியாவின் 7.5% வளர்ச்சியுடன், வேலைவாய்ப்பு பிரச்சனையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications