ராகுல் காந்தி பிரதமர் மோடியை குறிப்பிட்டு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பெட்ரோல், டீசல் விலையை உங்களால் குறைக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 35 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக அதன் பயனை மக்களுக்கு அளிக்க முடியுமா?
பெட்ரோல் விலையை லிட்டருக்கு 60 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட வேண்டும், அதன் பலனை மக்களுக்கு அளித்திட வேண்டும் என்றும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
எரிபொருள் விலை
எண்ணெய் சந்தைபடுத்தல் நிறுவனங்கள் இப்போது ஒரு வாரமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் பெட்ரோல் விலை 2.69 ரூபாய் குறைந்துள்ளதாகவும், இதே டீசல் விலை 2.33 ரூபாய் குறைந்துள்ளதாகவும், இது முறையே புதன்கிழமையன்று 70.29 ரூபாயாகவும் மற்றும் 63.01 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை பிரதிபலிக்கும்
எண்ணெய் நிறுவனங்கள் சில்லறை விலையினை முந்தைய 15 நாட்களின் சராசரியை விலையை பொறுத்து நிர்ணயிக்கப்படும் நிலையில், கச்சா எண்ணெய் விலை அடுத்த 7 -10 நாட்களில் சில்லறை விலையில் பிரதிபலிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக இந்த நிலையில் இந்த வீழ்ச்சியானது இனி வரும் நாட்களில் பிரதிபலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தேவை குறைந்து வருகிறது
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் தேவை குறைந்து வருகிறது. இதனால் உற்பத்தியை குறைக்க ஓபெக் நாடுகள் முடிவு செய்திருந்த நிலையில், ரஷ்யா அதற்கு ஒத்து வரவில்லை. இந்த நிலையில் சவுதி அரேபியா விலையை குறைத்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சி காண உதவும்
மேலும் ஏப்ரல் 1-லிருந்து தினசரி 12.5 பில்லியன் பேரல்களாக எண்ணெய் சப்ளை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இது கச்சா எண்ணெய் விலையில் விலை யுத்தத்தினையே கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பினையடுத்து எண்ணெய் விலை 35% வீழ்ச்சி கண்டது. இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். இது பொருளாதாரத்தினையும் மேம்படுத்த உதவும் என்றும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications