2024 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்த விபரத்தை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குச் சொந்தமாக வாகனங்களோ அல்லது வீடோ இல்லை. ஆனால் அவருக்கு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி-யின் மொத்த சொத்துக்களில் ரூ.9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் மற்றும் ரூ.11.5 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக வகைப்படுத்தியுள்ளார்.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பங்குச் சந்தை முதலீடுகள் தான், ராகுல் காந்தி பங்குச்சந்தை முதலீட்டின் மதிப்பு மட்டும் ரூ.4.3 கோடியாகும். இதோடு மியூச்சுவல் ஃபண்ட் டெபாசிட்டாக ரூ.3.81 கோடி, வங்கிக் கணக்கில் ரூ.26.25 லட்சம், ரொக்கமாகக் கையில் ரூ.55,000 வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் 2022-23ல் தனது முதலீட்டின் வாயிலாக ரூ.1.02 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டின் ரூ. 1.02 கோடி வருமானத்தில், அவர் வயநாடு எம்.பி.யாக அவர் பெற்ற சம்பளம், வங்கி வட்டி, ஈவுத்தொகை, பத்திரங்கள் மற்றும் ராயல்டிகள் மூலம் வந்தது எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத வணிக கட்டிடங்கள் மற்றும் நிலம் உட்பட ரூ.11.15 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளையும் ராகுல் காந்தி வைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ரூ.15.2 லட்சம் மதிப்புள்ள தங்கப் பத்திரங்களையும் வைத்துள்ளார். இன்சூரன்ஸ் பாலிசிகள், தேசிய சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் சேமிப்பு மற்றும் பிற திட்டங்களில் ரூ.61.52 லட்சம் முதலீடு செய்துள்ளார். இதேவேளையில் ராகுல் காந்திக்கும் சுமார் ரூ.49.7 லட்சம் கடன் உள்ளது.
சிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவியும் சிபிஐ தலைவர் அன்னி ராஜா மற்றும் பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோருக்கு எதிராக ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டிப்போட உள்ளார். 2019 பொது தேர்தலில், கேரளா மாநிலத்திலேயே அதிகபட்சமாக 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார் ராகுல் காந்தி.
லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்டமாக கேரளாவில் 20 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்காக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் முடிவுகள் அடுத்த 5 வருடத்தை யார் ஆட்சி செய்யப்போவது என்ற முக்கியமான கேள்விக்குப் பதில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications