இந்தியாவில் சரியான போக்குவரத்து வசதிகளே இல்லாத இடத்தில் கூட எல் ஐ சி ஏஜெண்ட் ஒருவர் சாதாரணமாக அந்த பகுதிகளில் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
எனவே அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு முதலீடுகள் அல்லது இன்சூரன்ஸ் என எது என்றாலும் எல் ஐ சி ஏஜெண்ட்கள் தான் நினைவுக்கு வருவார்கள். தானாக வியாபாரமும் வளர்ந்தது.
அப்படி இந்தியாவின் கடைக் கோடி குடிமகன் வரை, தொட்டுக் கொண்டு இருக்கும் எல் ஐ சி நிறுவனமே என்பிஏ சிக்கலில் இருக்கிறது.
என்பிஏ
சமீபத்தில் வெளியான செய்திகளில், எல் ஐ சி நிறுவனத்தின் வாராக் கடன் இந்த 2019 - 20 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 30,000 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஏப்ரல் 2019 முதல் செப்டம்பர் 2019 வரையான அரையாண்டில், விகிதாச்சாரத்தில் பார்த்தால் தோராய வாராக் கடன் (Gross Non Performing Asset) 6.1 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.
இரண்டு மடங்கு
கடந்த ஐந்து ஆண்டுகளில், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கம்பெனியின் வாராக் கடன், சுமாராக இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது என மனி கண்ட்ரோல் என்கிற பொருளாதார செய்திகளை வெளியிடும் வலைதளம் சொல்லி இருக்கிறது. இப்போது இந்த பிரச்சனை குறித்து காங்கிரஸ் பேசத் தொடங்கி இருக்கிறது.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன் ட்விட்டர் பக்கத்தில் "கோடிக் கணக்கான நேர்மையான மக்கள் எல் ஐ சி-ல் முதலீடு செய்து இருக்கிறார்கள். அதற்கு, அவர்கள் எல் ஐ சி நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான் காரணம். மோடி அரசு, எல் ஐ சி நிறுவனத்தை சேதப்படுத்துவதால், அந்த நேர்மையான மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குகிறது" எனச் சொல்லி இருக்கிறார்.
மோசமான விளைவுகள்
மேலும் "எல் ஐ சி நிறுவனத்தை சேதப்படுத்துவதால், மக்களுக்கு எல் ஐ சி நிறுவனத்தின் மீது இருக்கும் நம்பிக்கையையும் அழித்துக் கொண்டு இருக்கிறது மோடி அரசு. இந்த குறுகிய கால கண்ணோட்டத்துடன் எடுக்கும் நடவடிக்கைகளால், ஒரு வித பயமும், மோசமான விளைவுகளும் ஏற்படலாம்" எனச் சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி.
முதலீடுகள்
எல் ஐ சி சுமாராக 36 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த காலங்களில் அதிகமான தனியார் துறையில் முதலீடு செய்து இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எப்போதும் 1.5 - 2 சதவிகிதமாக மட்டும் இருக்கும் என்பிஏ, இப்போது 6.10 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.
எச்சரிக்கை
எல் ஐ சி நிறுவனம் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்வது, அதிக ரிஸ்கான வேலை என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறது. இப்போது முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியே ட்விட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications