ராமேஸ்வரம்: மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் இடையே அமைக்கப்பட்டு வரக்கூடிய புதிய பாம்பன் பாலத்தின் பணிகள் நிறைவடைந்து அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பாம்பனில் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே கடல் மீது அமைக்கப்பட்டிருந்த பழைய பாலம் பழுதடைந்ததால் அது தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரத்திற்கு தற்போது ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருக்கிறது. மண்டபம் வரை மட்டுமே சென்று விட்டு ரயில்கள் திரும்பி விடுகின்றன. இந்த நிலையில் பாம்பனில் புதிய பாலத்தை கட்டமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த பாதையில் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார். இதற்காக பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மண்டபம் ராமேஸ்வரம் இடையே அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய பாலக் கட்டுமான பணியை செப்டம்பர் இறுதிக்குள் முடித்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
இதை அடுத்து ராமேஸ்வரம் வரை பயணிகள் ரயில்களுக்கான முன்பதிவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்த வழித்தடத்தில் தண்டவாளம், தகவல் தொடர்பு, மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் இருப்பதை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் என தன்னுடைய உத்தரவில் அவர் கூறியுள்ளார்.
புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை கட்டமைக்கும் பணியினை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய பாலத்திற்கான கட்டுமான பணிகள் ஒவ்வொரு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக ரயில்வே வாரியத்தின் உள்கட்டமைப்பு துறை உறுப்பினரான அணில் குமார் கந்தேவால் புதிய பாலத்தின் பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன எனக் கூறியிருந்தார்.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிக்கு இடையே ஆங்கிலேயர் காலத்தில் கடல் மீது கட்டப்பட்டது தான் பாம்பன் பாலம். இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு முதல் இயங்கிக் கொண்டிருந்தது.
அது மட்டும் இன்றி இந்த ரயில் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக நவீன தூக்குபாலமும் அமைக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் உப்புத் தன்மை மற்றும் அரிமானம் காரணமாக பாலம் சேதம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது ரயில்வே துறை சார்பில் புதிய பாலத்தை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications