நாட்டிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் மாநில அரசு மின்சாரத்தில் இயங்கக்கூடிய நவீன சொகுசு கப்பலை அறிமுகம் செய்துள்ளது. இனி ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகருக்கு செல்பவர்கள் அங்குள்ள அனா சாகர் ஏரியில் இந்த மின்சாரத்தில் இயங்கும் டபுள் டக்கர் சொகுசு கப்பலில் பயணம் செய்ய முடியும். 150 பயணிகள் பயணம் செய்யக்கூடிய வகையில் இந்த சொகுசு கப்பல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் 75 பேர் வரை பயணம் செய்யலாம் என ராஜஸ்தான் அரசு கூறியுள்ளது.
மின்சாரத்தில் இயங்கக்கூடிய இந்த சொகுசு கப்பல் சேவை வெள்ளிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில சபாநாயகர் வாசுதேவ் தேவ்னானி, நீர்வளத் துறை அமைச்சர் சுரேஷ் சிங் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். மின்சாரத்தில் இயங்கும் சொகுசு கப்பல் சேவையை தொடங்கி வைத்து அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் பயணம் மேற்கொண்டனர்.

கோவாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய கிராப்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சொகுசு கப்பலை கட்டமைத்து தந்ததாக இதன் உரிமையாளரான ஜே பி டாட் கூறியுள்ளார். கடினமான இரும்பு அல்லாமல் ஃபைபரைக் கொண்டு உருவாக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் முதல் சொகுசு கப்பல் இது என அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த எடை கொண்ட இந்த சொகுசு கப்பலின் வடிவம் நான்கு அடி கொண்ட தண்ணீரில் கூட செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அடுக்கு கொண்ட சொகுசு கப்பல் 22 மீட்டர்கள் நீளம் கொண்டிருக்கிறது. இதில் கீழே உள்ள அடுக்கில் குளிர்சாதன வசதிகளும் மேலே உள்ளடக்கில் நடனம் ஆடுவதற்கான தளம் மற்றும் திறந்தவெளி இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகளுக்கு ராஜஸ்தான் மாநில உணவுகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சின் பேட்டரி பவர் கொண்டது இயங்கும்போதே தானாகவே ரீசார்ஜ் செய்து கொள்ளுமாம். அதே போல எஞ்சின் நின்றாலும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் இருக்கும் என சொல்லப்படுகிறது. கூடிய விரைவில் இந்த கப்பலின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்ற சொகுசு கப்பல்களோடு ஒப்பிடும்போது இந்த கப்பலின் எஞ்சின் எந்தவித ஒளியையும் ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் இயங்குகிறது. இந்த சொகுசு கப்பலில் பயணம் செய்வதற்கு 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications