சென்னை: காக்னிசென்ட் இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குனரான ராஜேஷ் நம்பியார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக காக்னிசென்ட் இந்தியாவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தற்போது பதவி விலகியது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. இதேவேளையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காக்னிசென்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ராஜேஷ் நம்பியார் ஐடி ஊழியர்களின் தலைமை அமைப்பான நாஸ்காமின்(Nasscom) தலைவராக கூடிய விரைவில் பொறுப்பேற்க இருக்கிறார். அதன் பொருட்டு காக்னிசென்ட் இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

நாஸ்காம் என்பது மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் ஆகும். இது 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை ஆகிய துறைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாஸ்காம் இந்தியாவில் ஒரு தனிப்பட்ட வர்த்தக சங்கமாக இருக்கிறது. தற்போது டெபாஜானி கோஸ் நாஸ்காமின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதை அடுத்து ராஜேஷ் நம்பியார் அதற்கு தேர்வாகியுள்ளார்.
காக்னிசென்ட் இந்தியாவில் இருந்து ராஜேஷ் நம்பியார் விலகுவதை அடுத்து ராஜேஷ் வாரியர் அந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்படுவார் என்றும் அவர் அக்டோபர் 1 தேதி முதல் இந்த உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்றும் காக்னிசென்ட் இந்தியா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இவர் காக்னிசென்ட் நிறுவனத்தின் உலகளாவிய செயல்முறை தலைவராகவும் பணியாற்றுவார் என தெரிவித்துள்ளது.
காக்னிசென்ட் நிறுவனத்தில் இணைவதற்கு முன்னதாக ராஜேஷ் வாரியர், இன்போசிஸ் அமெரிக்கா நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர்.
கான்கிசென்ட் இந்தியாவின் தலைமை மேலாண் இயக்குனராக செயல்பட்டு வந்த ராஜேஷ் நம்பியார் 250 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நாஸ்காமில் தலைமை பொறுப்பினை ஏற்கிறார். தற்போது இதன் உறுப்பினராக இருக்கும் நம்பியார் விரைவிலேயே இதன் தலைவராகிறார். முன்னதாக அமைப்பின் தலைவரை தேர்வு செய்வதற்காக பல்வேறு ஐடி நிறுவனங்களின் தலைமை செயல் இயக்குனர்கள் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அதில் நம்பியாரும் ஒரு நபராக இருந்தார்.
ராஜேஷ் நம்பியார் காக்னிசென்ட் இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு இணைந்தார். அப்போது அவருக்கு தலைமை மேலாண் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது. காக்னிசென்டில் இணைவதற்கு முன்பு ஸீயான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை வகித்து வந்தார் .
அதற்கு முன்பாக அவர் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அங்கே செயலிகளின் சேவை பிரிவில் வேலை செய்து வந்தார். அதன் மதிப்பு கிட்டதட்ட 8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.ராஜேஷ் நம்பியார் தலைமை பொறுப்பை ஏற்பதன் மூலம் நாஸ்காம் அமைப்பு மேலும் வலுப்பெறும் அதன் உறுப்பு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications