சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எது பேசினாலும் அது தலைப்பு செய்தியாகிவிடுகிறது. குறிப்பாக சமூகவலைதளங்களில் பெருமளவில் விவாதிக்கும் பொருளாக மாறிவிடும். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிக்கும் 173ஆவது திரைப்படம் குறித்த அறிமுக விழாவில் ரஜினிகாந்த் பேசியது தான் தமிழ்நாடெங்கும் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் 173ஆவது படத்தின் பெயர் 'தர்மன்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விழா இன்று சென்னையில் நடந்தது. டிராகர் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், 'தலைவர் 173' படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி, இந்த படத்திற்கு 'தர்மன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் "பேச அழைக்கிறோம் எனச் சொன்னாலே தயக்கமாக இருக்கிறது. காரணம், நான் பேசினால் மற்றவர்களுக்கும் பிரச்னை, எனக்கும் பிரச்னை. ஏதாவது கிளப்பிக்கொண்டே இருப்பார்கள். நான் சும்மா இருந்தால் இவர் என்ன பேசவே மாட்டேன் என்கிறார்? வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா? என்பார்கள். பேசினால், "ஆமாம், இப்ப பேசு" எனக் கிண்டல் அடிப்பார்கள். ரொம்ப நாள் கழித்துதான் ஒன்றை தெரிந்துகொண்டேன், நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது; நமக்குப் பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்." என கூறினார்.
நம்மள பிடிக்காதவங்களுக்கு நம்ம என்ன செஞ்சாலும், எது செஞ்சாலும் பிடிக்காது…
— Suresh Balaji (@surbalu) June 24, 2026
நம்மள பிடிச்சவங்களுக்கு நம்ம என்ன செஞ்சாலும், எது செஞ்சாலும் பிடிக்கும் என்று நினைக்கிறது முட்டாள்தனம்
Words 🔥🔥🔥🔥🔥🔥#Dharman | #Rajinikanth | #SuperstarRajinikanth pic.twitter.com/KqPzEPWtwE
ரஜினிகாந்தின் இந்த பேச்சு யாருக்கானது என்று சமூக வலைதளங்களில் தற்போது விவாத பொருளாகி உள்ளது. முதலமைச்சர் விஜய் திறந்து பேச மாட்டேங்கிறார். வாயை திறங்க சி.எம் சார் என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். நேற்று சட்டசபையில் கவர்னர் உரை மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பேசினார். அது பல்வேறு சர்ச்சையாகி, விவாத பொருளாகிவிட்டது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் இன்றைய பேச்சும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. இதற்கிடையே படத்தின் அறிமுக விழா நிகழ்வில் கலந்துகொண்டு கிளம்பிய போது, நடிகர் ரஜினிகாந்த்திடம், "முதல்வர் விஜய்யின் பிறந்த நாளுக்கு ஏன் வாழ்த்துகளைத் தெரிவிக்கவில்லை?" எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ரஜினி, "பேசிவிட்டேன்... பேசிவிட்டேன்..." என பதிலளித்தார். இதனால், செல்போனில் அழைத்து முதல்வரை வாழ்த்தியதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
