அமெரிக்காவை சேர்ந்த சவுத் வெஸ்ட் ஏர்லைன் நிறுவனத்தில் 108 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை அதன் வாரிய உறுப்பினர்களில் ஒருவரும் இன்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகேஷ் கங்க்வால் வாங்கி இருக்கிறார். ராகேஷ் கங்க்வால் விமான சேவை நிறுவனங்களிடையே புகழ்பெற்ற பெயர். இவர் சவுத் வெஸ்ட் ஏர்லைன் நிறுவனத்தில் 108 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை வாங்கி இருப்பதாக அந்த நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
ராகேஷ் கங்க்வால் சவுத் வெஸ்ட் ஏர்லைன் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 29 டாலர்கள் என்ற விலைக்கு 3.6 மில்லியன் பங்குகளை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல கேரிகெல்லி என்ற நிறுவனத்தின் மற்றொரு மூத்த அதிகாரியும் கணிசமான அளவு பங்குகளை வாங்கி இருக்கிறார்.

இந்த தகவல் வெளியானதை அடுத்து நியூயார்க் சந்தையில் சவுத் வெஸ்ட் ஏர்லைன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 4.7 சதவீதம் வரை உயர்ந்தது. கடந்த ஜூலை மாதத்தில் தான் ராகேஷ் கங்க்வால் சவுத் வெஸ்ட் ஏர்லைன் நிறுவனத்தின் வாரிய குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸை சரியான முறையில் வழிநடத்துவதற்கு ஒரு தலைமை தேவைப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில் ராகேஷ் கங்க்வால் வாரிய குழுவில் இணைந்தார். தற்போது கணிசமான பங்குகளையும் சொந்தமாக்கியுள்ளார்.
இண்டிகோ நிறுவனத்தின் துணை நிறுவனரான ராகேஷ் இந்நிறுவனத்தில் தனக்கு சொந்தமான பங்குகளை கணிசமான அளவு குறைத்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இவரும் இவரது குடும்பமும் 5.83 சதவீத பங்குகளை 10500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. இந்த நிலையில் அவர் இண்டிகோவில் பங்குகளை விற்பனை செய்துவிட்டு சவுத் வெஸ்டர்ன் பங்குகளை வாங்கி இருப்பது விமான துறை சார்ந்த நிறுவனங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
72 வயதான ராகேஷ் கங்க்வால் கொல்கத்தாவை சேர்ந்தவர். இவர் ஐஐடி கான்பூரில் கல்வி பயின்றவர். பின்னர் அமெரிக்காவில் சென்று எம்பிஏ பட்டப்படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து விமான போக்குவரத்து துறையில் இவர் வேலைக்கு சேர்ந்தார். யுனைடெட் ஏர் லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி விமான நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பின்னர் இந்தியாவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இந்திய மற்றும் அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இவர் இடம்பிடித்துள்ளார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications