இந்தியாவின் மிகவும் பிரபலமான தனியார் பங்கு முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, மார்ச் 2020ல் அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் பங்குச்சந்தையில் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகப்படியான சரிவைச் சந்தித்த நிலையில் 52 வார சரிவில் இருந்து சுமார் 430 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ள டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்குகளைத் தற்போது வாங்கியுள்ளார்.
இதே லாக்டவுன் காலத்தில் நாட்டின் டெலிகாம் சேவைகளும், டிஜிட்டல் சேவைகளும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த நிலையில் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா முதலீடு, முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக ஈர்ப்பைப் பெற்றுள்ளது.
ரேகா ராகேஷ் ஜூன்ஜூன்வாலா
டிசம்பர் மாதம் வெளியான அறிக்கையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மனைவி ரேகா ராகேஷ் ஜூன்ஜூன்வாலா டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சுமார் 32,00,687 பங்குகள் அதாவது இந்நிறுவனத்தின் 1.12 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 சதவீத பங்கு இருப்பு
பொதுவாக நிறுவனம் 1 சதவீதம் அதிகமாகப் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்களின் பெயர்களைத் தான் வெளியிடும் அந்த வகையில் டிசம்பர் காலாண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ள நிலையில் கடந்த 3 மாதத்தில் இப்பங்குகளை வாங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.
லாக்டவுன் சரிவு
மார்ச் மாத லாக்டவுனில் டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் 400 ரூபாய் அளவீட்டில் இருந்து 200 ரூபாய் வரையில் சரிந்த நிலையில் கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 430 சதவீதம் வளர்ச்சி அடைந்து அதிகப்படியாக 1,168 ரூபாய் அளவீட்டைத் தொட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சந்தையில் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் டாடா கம்யூனிகேஷ்ன்ஸ் கணிசமான உயர்வை அடைந்துள்ளது. இதனால் 0.68 சதவீத வளர்ச்சியில் ஒரு பங்கு விலை 1,096 ரூபாய் வரையில் உயர்ந்து தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இதர முதலீட்டாளர்கள்
இதேபோல் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களும் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் தங்களது பங்கு இருப்பை டிசம்பர் காலாண்டில் 0.38 சதவீதத்தில் இருந்து 0.41 சதவீதமாக உயர்த்தியுள்ளனர்.
இதோடு அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் 17.56 சதவீதத்தில் இருந்து 17.65 சதவீதமாகவும், தனிநபர் முதலீட்டாளர்கள் 2.76 சதவீதத்தில் இருந்து 3சதவீதமாகவும் தங்களது பங்கு இருப்பை உயர்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications