ரக்சா பந்தன் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு உங்கள் சகோதர சகோதரிகளுக்கு பாரம்பரிய பரிசுகளுக்கு பதிலாக அவர்களின் நிதி எதிர்காலத்தை மேம்படுத்தும் ஒன்றை பரிசாக தருவதைக் கருத்தில் கொள்ளலாம். சமீபத்திய ஆய்வின்படி 18 வயது முதல் 30 வயது உடையவர்களுக்கு மிகக் குறைந்த நிதித்திறன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் நிதி தொடர்பான திட்டமிடல் இல்லாமல் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
எனவே இந்த ரக்சா பந்தன் பண்டிகையில் SIP முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், பங்குகள் போன்ற முதலீட்டு திட்டங்களை பரிசாக தருவது குறித்து நீங்கள் யோசிக்கலாம். இதன் மூலம் உங்கள் சகோதரர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் வாழ்நாள் வளர்ச்சிக்கான பழக்கத்தை பரிசாக தருகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்: SIP முதலீடுகள் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை வழங்கும் திட்டமாகும். இந்த ரக்சா பந்தனுக்கு உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு SIP முதலீட்டை அறிமுகப்படுத்தலாம். உங்கள் உடன் பிறந்தவரின் சார்பாக மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் ஆரம்ப முதலீட்டைச் செய்யலாம். மேலும் முதலீடு செய்ய அவர்களை ஊக்குவிக்கலாம்.
SIP திட்டங்கள் ஒரே ஒரு முறை மொத்தமாக முதலீடு செய்யும் வாய்ப்பையும் வழங்குகிறது. அதே நேரத்தில் மாதாந்திர வாரியாக காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை எனப் பிரித்து முதலீடு செய்யும் வாய்ப்பையும் வழங்குகிறது. இதில் எது உங்களுக்கு விருப்பமோ? அல்லது உங்களுக்கு ஏற்றதோ? அதை நீங்கள் தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
SIP முதலீடுகளில் கூட்டு வட்டி கிடைப்பதால் உங்கள் வருமானம் காலப்போக்கில் வளரும். இது போன்ற பரிசை வழங்கும்போது அன்றைய தினமே கொடுக்கும் பிற பரிசுகளை விட அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் நீண்ட கால பரிசை வழங்குவது நல்ல பலன்களைத் தரும்.
சுகாதார காப்பீடு: உங்கள் உடன்பிறந்த சகோதரிகளுக்கு உடல்நலக் காப்பீட்டை வழங்குவது அவர்களின் நலனில் அக்கறை காட்டுவதற்கான சிறந்த பரிசாகும். உடல்நலக் காப்பீடு எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு வலையை வழங்குகிறது. உங்கள் உடன்பிறந்தவர்கள் நிதிச் சுமையின்றி சுகாதாரப் பாதுகாப்பு பெறுவதை உறுதிசெய்கிறது. இன்றைய உலகில், மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், விரிவான மருத்துவக் காப்பீட்டை வைத்திருப்பது அவசியம்.
பிக்சட் டெபாசிட்: உங்கள் சகோதரருக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கு நம்பகமான வருமான ஆதாரத்தை வழங்குவதற்காக இந்த ராக்கி பண்டிகையில் அவர்களின் பெயரில் ஒரு பிக்சட் டெபாசிட் (FD) திட்டத்தில் முதலீடு செய்யலாம். பிக்சட் டெபாசிட் என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் சேமிப்பு திட்டமாகும். இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். FD-களில் கிடைக்கும் வட்டி பொதுவாக வழக்கமான சேமிப்பு கணக்கை விட அதிகமாக இருக்கும். இது பிரபலமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும்.
பேப்பர் கோல்டு: உங்கள் சகோதர சகோதரிகளுக்கு பேப்பர் கோல்டை பரிசாக வழங்கலாம். பேப்பர் கோல்டு என்பது தங்கப் பத்திரங்களை குறிக்கிறது. தங்கப் பத்திரங்கள் பொதுவாக கையில் தங்கமாக வைத்திருப்பதற்கு பதிலாக பத்திரங்களாக வைத்திருக்கும் வசதியை வழங்குகின்றன. இந்தப் பத்திரங்களை எப்போது பணம் தேவைப்படுகிறதோ அப்போது கொடுத்து தங்கமாகவோ அல்லது பணமாகவோ பெற்றுக் கொள்ள முடியும்.
பங்குச் சந்தை முதலீடு: பங்குச்சந்தையில் ஆர்வமுள்ள உடன்பிறப்புகளுக்கு ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் பங்குகளை பரிசளிப்பது லாபகரமான தேர்வாக இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது அதிக லாபத்தை பெற்று தர உதவும். சரியான ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலுடன் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நல்ல வருமானத்தை பெறலாம். எனவே பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த உடன்பிறப்புகளுக்கு பங்குகளை பரிசாக வழங்குவது சிறந்த தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications