சென்னை ரியல் எஸ்டேட் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள், அமைப்புகள் தங்களிடம் இருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டி வருகிறது.
ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது வர்த்தகத்திற்கு அவசியமில்லா அல்லது முக்கியமல்லாத சொத்தை சமீபத்தில் ரூ.515 கோடிக்கு விற்றுள்ளது. இதை வாங்கியது பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ்.

ராம்கோ சிமெண்ட்ஸ் சென்னையில் மேடவாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ராம்கோ சிமென்ட்ஸ் இதுவரை ரூ.1,017 கோடி மதிப்புள்ள முக்கியமல்லாத சொத்துக்களை விற்றுள்ளது. ராம்கோ சிமெண்ட்ஸ் 2025ஆம் நிதியாண்டில் 2ஆம் காலாண்டில் Non Core சொத்து விற்பனை மூலம் ரூ.1,000 கோடி திரட்டும் இலக்கை வைத்தது, தற்போது இதை மிஞ்சியுள்ளது.
பிரெஸ்டீஜ் குழுமம் சென்னை மேடவாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. இந்த நிலத்தில் சுமார் 5 மில்லியன் சதுர அடி கட்டுமானம் செய்ய முடியும். இதன் மூலம் ரூ.5,000 கோடிக்கு மேல் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் பங்குச்சந்தையில் பிரெஸ்டீஜ் குழுமம் சமர்ப்பித்த அறிக்கையில், மேடவாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக அறிவித்தாலும், இதை ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்திடம் வாங்கியதாக தெரிவிக்கவில்லை.
மற்ற திட்டங்கள்
சென்னை எம்டிபி சாலையில் RMZ ஒன் பாராமவுண்ட் திட்டத்துக்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் சுமார் 30 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை சென்னையில் உருவாக்க உள்ளது. இதில் சுமார் 29,000 பேர் வேலைவாய்ப்பை பெறுவர். இது சென்னையின் தொழில் வளர்ச்சிக்கு பெரிய ஊக்கம் தரும்.
உலகின் மிகப்பெரிய லாஜிஸ்டிக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனமான ப்ரோலாஜிஸ் சென்னையில் இரண்டாவது தொழிற்துறை லாஜிஸ்டிக்ஸ் பார்க் கட்டுகிறது. இந்த பார்க் புதிதாக வரவிருக்கும் பெரிபெரல் ரிங் ரோடு அருகே 50 ஏக்கர் நிலத்தில் உருவாகி வருகிறது.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஜான்சன் எலெக்ட்ரிக் நிறுவனத்துக்கு பனப்பாக்கம் சிப்காட்டில் 26.69 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது புதிதாக கட்டப்பட்டு வரும் டாடா-ஜேஎல்ஆர் தொழிற்சாலை அருகே வருகிறது. புதிய தொழிற்சாலை PMDC மோட்டார்கள் மற்றும் பிற உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும். இது ஆட்டோமொபைல் துறைக்கு பெரியளவில் உதவும், வேலைவாய்ப்பு உருவாக்கும்.


Click it and Unblock the Notifications