தமிழ்நாடு அரசு மொழி பிரச்சனை, டிலிமிடேஷன், வரி வருமான பகிர்வு என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையிலும், 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்ட மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் சிப்காட் கடந்த சில வாரத்தில் மாநில தொழிற்பூங்காவில், பல நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ராணிப்பேட்டை, கோயம்புத்தூர் சிப்காட் பகுதியில் பல நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலையை அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Ranipet SEZ: ராணிப்பேட்டை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ), வாப்கோ நிறுவனத்திற்கு 10 ஏக்கர் நிலமும், டா செங் ( Dah Sheng) நிறுவனத்திற்கு 7 ஏக்கர் நிலமும், நான் பை ரெசின்ஸ் (Nan Pai Resins) நிறுவனத்திற்கு 10 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது இப்பகுதியில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு துறையை மேம்படுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. ஏற்கனவே இங்கு டாடா குழுமம் பல தொழிற்சாலைகளை உருவாகத் திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Varapatti SIPCOT: கோயும்புத்தூர் வரப்பட்டியில் உள்ள சிப்காட் தொழில் பகுதியும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டு வருகிறது. இங்கு, மேக் கண்ட்ரோல்ஸ் நிறுவனத்திற்கு 10 ஏக்கர் நிலமும், சம்மிட் ஹைக்ரோ நிறுவனத்திற்கு 5 ஏக்கர் நிலமும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு 4 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பல சிறிய நிறுவனங்களுக்கு 2 முதல் 3 ஏக்கர் வரையிலான நிலங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
Shoolagiri SIPCOT: சூளகிரி மொபிலிட்டி பூங்கா-வில் மின்னணு மற்றும் வாகனத் துறைகளில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இங்கு, ஹைக்யூ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு 5.3 ஏக்கர் நிலமும், சிஎம்ஆர் டொயாட்சு நிறுவனத்திற்கு 4.6 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
Manallur SIPCOT: சென்னை மணலூரில் உள்ள மின்னணு உற்பத்தி மையத்தில், விக்னேஷ் பாலிமர்ஸ் நிறுவனத்திற்கு 13.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, பாலிமர் துறையின் வளர்ச்சிக்கு புதிய பேஸ்மென்ட் போடப்பட்டு உள்ளது.
Oragadam SIPCOT: ஒரகடம் மருத்துவ சாதன பூங்காவும் விரிவடைந்து வருகிறது. இங்கு, எஸ்3வி வாஸ்குலர் நிறுவனத்திற்கு 12 ஏக்கர் நிலமும், கிரெக்கோ ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு 6.5 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
Katpadi SIPCOT: காட்பாடியில், அஸ்பயர் காலணி நிறுவனத்திற்கு 20 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் காலணி உற்பத்தித் தொழிலின் பெரிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது. பெரம்பலூர் பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சி இத்துறையிலும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mambakkam SIPCOT: சென்னைக்கு அருகிலுள்ள மாம்பாக்கத்திலும், என்ட்யூரன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு 9 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன.
Tuticorin SIPCOT: தூத்துக்குடி சர்வதேச பர்னிச்சர் பூங்காவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கு, சைலோசுயிஸ் (Xylosuisse) நிறுவனத்திற்கு விரிவாக்கத்திற்காகக் கூடுதலாக 50 ஏக்கர் நிலமும், கிரெஸ்ட் லாஷிங் நிறுவனத்திற்கு 3 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் TIDCO நிறுவனம் 10 ஏக்கர் நிலத்தில் வர்த்தக மையத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தருமபுரி, தேனி மற்றும் திண்டிவனம் சிப்காட்களிலும் இதே போன்று பல நிறுவனங்களுக்குச் சிறிதும் பெரிதுமாக நில ஒதுக்கீடுகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த நிலத்தில் அடுத்த சில மாதங்களில் கட்டுமான பணிகளைத் துவங்கி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்த நிறுவனங்கள் வர்த்தகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications