மக்கள் பொதுவாக நடிகை, நடிகைகள், விளையாட்டு வீரர்களைக் கொண்டாடுவது போல் தொழிலதிபர்களைக் கொண்டாடுவது இல்லை, ஆனால் இந்திய மக்கள் அதிகம் மதிப்பு வைத்திருக்கும் ஒரு தொழிலதிபர் ரத்தன் டாடா. டிசம்பர் 28, 1937ம் ஆண்டு குஜராத்தின் சூரத்தில் பிறந்த ரத்தன் டாடாவுக்கு இன்று 86வது பிறந்த நாள்.
டாடா என்னும் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஜாம்செட்ஜி டாடாவின் தத்து பேரப்பிள்ளையான நேவல் டாடா-வின் மகனாக 1937 ஆண்டு ரத்தன் டாடா பிறந்தார்.

ரத்தன் டாடா 10 வயதாக இருக்கும் போதே அவரது பெற்றோர்கள் விவாகரத்து செய்த காரணத்தால், 1948ல் பெற்றோரை பிரிந்து ரத்தன் டாடாவும் அவருடைய சகோதரர் ஜிம்மி டாடா, அவர்களுடைய பாட்டி நவாஜ்பாய் டாடா பாதுகாப்பில் தான் வளர்ந்தனர்.
ரத்தன் டாடா 8 ஆம் வகுப்பு வரை மும்பையில் உள்ள கேம்பியன் பள்ளியில் படித்தார், அதைத் தொடர்ந்து மும்பை கதீட்ரல் அண்ட் ஜான் கானான் பள்ளியிலும், சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியிலும், நியூயார்க் நகரத்தில் உள்ள ரிவர்டேல் கண்ட்ரி பள்ளியில் 1955 ஆண்டுப் பள்ளிக் கல்வியை முடித்தார்.

ரத்தன் டாடா-வின் குழந்தை பருவம் நன்றாகச் சென்றது ஆனால் தன்னுடைய தாய் தந்தையின் திருமண முறிவும், விவாகரத்தும் தன்னையும் தன்னுடைய சகோதரரையும் நிறையக் கஷ்டங்களைச் சந்திக்கும் நிலையை உருவாக்கியது. அந்த நாளில் விவாகரத்து என்பது இப்போது போல் சாதாரண விஷயம் அல்ல என ரத்தன் டாடாவே ஒரு பேட்டியில் கூறினார்.
மேலும் எங்களைப் பாட்டி தான் கவனித்துக் கொண்டார் என்னுடைய அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்தபோது பள்ளியில் என்னையும் என் சகோதரரையும் புண்படும்படி பேசுவார்கள், கேலி செய்வார்கள் எங்களைச் சண்டை போட தூண்டுவார்கள். ஆனால் அந்த நேரத்தில் எங்கள் பாட்டி எங்களைச் சண்டை போடக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும் எனக் கூறுவார். என்ன நடந்தாலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என ரத்தன் டாடா இப்பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் ரத்தன் டாடா இந்தப் பேட்டியில் தன்னுடைய தந்தையுடன் தனக்கு இருக்கும் மனக்கசப்புகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். தாயின் 2வது திருமணத்திற்கு பின்பு தாய் உடனான உறவு பெரிய அளவில் குறைந்தது.
இதனால் ரத்தன் டாடா வாழ்க்கையில் இளம் வயதில் இருந்து தனிமையில் தத்தளித்தது மட்டும் அல்லாமல் இன்று வரையில் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாடி வருகிறார். ரத்தன் டாடா ஒரு பேட்டியில் தனிமை மிகவும் கொடியது எனவும் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications