இந்தியாவின் முக்கியமான தொழிலதிபரும், அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்ற ரத்தன் டாடா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நாயின் புகைப்பட்டத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்திய வர்த்தக துறையின் வளர்ச்சிக்கும், ஊழியர்கள் நலனில் முக்கியதுவம் செல்லுத்த வேண்டும் என்பதை உறுதி செய்த ரத்தன் டாடா 85 வயதிலும் தனிப்பட்ட முறையில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் நேரடியாக முதலீடுகளையும், டாடா குழுமத்தின் வளர்ச்சியையும், முடிவுகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறார்.

இந்த பிசியான நேரத்திலும் மும்பையில் சியோன் மருத்துவமனையில் கைவிடப்பட்ட நாயின் புகைப்படங்களைப் பகிர்ந்து இதன் உரிமையாளர் யாரென்று தேடும் பணியை மட்டும் செய்யாமல் இந்த நாயை தனது அலுவலகம் எவ்வாறு கண்டுபிடித்தது என்று அவர் இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டார்.
நாயின் உரிமையாளரை கண்டுப்பிடிக்கும் வரையில் அவருடைய அலுவலகம் நாய்-க்கான அனைத்துப் பொறுப்பையும் ஏற்று, நாய்க்குட்டியை முழுமையாக கவனித்து வரும் எனவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் நாயின் காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திரு டாடா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் நாயின் பாதுகாவலர் அல்லது உரிமையாளர், கொடுக்கப்பட்ட மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு ரத்தன் டாடா வேண்டுகோள் விடுத்தார். விவரங்கள் மற்றும் 'உரிமைக்கான சான்றுகள்' உடன் மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் நாயின் உரிமையாளர் அடையாளம் காண பல படங்களைப் பகிர்ந்துள்ளார். இதில் முக்கியமாக நாய் கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் சிவப்பு நிறப் பட்டையை அணிந்திருக்கும் படங்களையும், நாய் கார் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்ப்பது போன்ற புகைப்படங்களும் பகிரப்பட்டு உள்ளது.

ரத்தன் டாடா நாய்கள் மீது எப்போதும் தனிப்பட்ட அன்பை வெளிப்படுத்தும் குணக்கத்தை கொண்டு உள்ளார். சொல்லப்போனால் ஜாம்செட்ஜி டாடா காலத்திலிருந்தே டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகமாக பாம்பே ஹவுஸ் கட்டிடத்தில் மழை காலத்தின் போது அப்பகுதியில் இருக்கும் தெருநாய்களைப் பாம்பே ஹவுஸ்-க்குள் அனுமதிப்பது வழக்கம்.
சில வருடங்களுக்கு முன்பு ரத்தன் டாடா உத்தரவின் பெயரில் பாம்பே ஹவுஸ்-ல் தெரு நாய்களுக்கான சிறப்பு குடில் உருவாக்கப்பட்டது. இந்தக் குடிலில் தெரு நாய்களுக்கான பொம்மைகள், விளையாட்டு பகுதி, தண்ணீர் மற்றும் உணவு ஆகியவை எப்போதும் வைக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

ரத்தன் டாடா-வுக்கு canine எனப்படும் கோரை நாய்கள் மீது அதிகப்படியான அன்பு உண்டு. ரத்தன் டாடா வீட்டில் டிட்டோ மற்றும் மாக்சிமஸ் என இரண்டு செல்ல நாய்களை வளர்த்து வருகிறார் எனவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications