பொதுவாக டாடா குழும நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டால் லைப் செட்டில் என்ற நிலைப்பாடு தான் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது, ஆனால் தற்போது நிலைமை மெல்ல மெல்ல மாறி வருகிறது.
டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டாடா சோசியல் சையின்ஸ் இன்ஸ்டியூட்-ல் (TISS) ஜூன் 28 ஆம் தேதி திடீரென 115 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 55 பேர் ஆசிரியர்களாகவும், 60 பேர் இதர பணியாளர்களாகவும் இருந்தனர்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை இந்த பணிநீக்க உத்தரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியானது. டாடா எடுகேஷன் டிரஸ்ட் (TET) தலைவர் ரத்தன் டாடா நிதி உதவி வழங்க முன்வந்ததை தொடர்ந்து இந்த பணிநீக்க முடிவு திரும்ப பெறப்பட்டு உள்ளது.
டாடா எடுகேஷன் டிரஸ்ட் உடன் தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான வழி பிறந்துள்ளது. டாடா சோசியல் சையின்ஸ் இன்ஸ்டியூட்-ல் ப்ராஜெக்ட், ப்ராஜெக்ட் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சம்பளத்திற்கான நிதியை ரத்தன் டாடா தலைமையிலான டாடா எடுகேஷன் டிரஸ்ட் விடுவிக்கும் என்று உறுதியளித்துள்ளது என்று TISS நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட 115 ஊழியர்களும் தங்கள் பணிகளை தொடர்ந்து பணிகளை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.மேலும் TISS நிறுவனம் ரத்தன் டாடா தலைமையிலான டாடா எடுகேஷன் டிரஸ்ட் மூலம் நிதி உதவிகளை பெற்ற பின்பு அவர்களின் சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா எடுகேஷன் டிரஸ்ட் அமைப்பிடம் எப்போதும் கிடைக்கும் ப்ராஜெட் நிதி கிடைக்காததால் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக TISS நிர்வாகம் தெரிவித்திருந்தது. கடந்த ஆறு மாதங்களாக டாடா எடுகேஷன் டிரஸ்ட் அமைப்பிடம் இருந்து நிதி கிடைப்பதில் சிக்கல் இருந்ததாகவும், நிதி தாமதமாக கிடைப்பதால் கல்லூரியை நடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் டாடா எடுகேஷன் டிரஸ்ட் நிதியுதவி திட்டங்களின் கீழ் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா சோசியல் சையின்ஸ் இன்ஸ்டியூட் கல்லூரியில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சம்பள பட்டியலில் உள்ளனர்.
1936 ஆம் ஆண்டு Sir Dorabji Tata Graduate School of Social Work என்ற பெயரில் நிறுவப்பட்டு, பின்னர் 1944 ஆம் ஆண்டு டாடா சோசியல் சையின்ஸ் இன்ஸ்டியூட் என மறுபெயர் பெற்றது. 1964 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் (யுஜிசி) 1956, பிரிவு 3 இன் கீழ் 'Deemed University' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications