தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் சமீப நாட்களாக கூகுள் நிறுவனத்தின் ஜெமினி செயலியின் 'நானோ பனானா' (Nano Banana) எனப்படும் புதிய தொழில்நுட்பம் மூலம் பலரும் புகைப்படங்களை உருவாக்கி வருகின்றனர்.
பயனர்கள் தங்கள் சாதாரண புகைப்படங்களை அழகான புடவை அணிந்த படங்களாக மாற்றிக் கொள்கின்றனர். பாலிவுட் கனவுகளை நனவாக்கும் வகையில் இந்த ஏஐ மாடல் ஒரு புதிய டிரெண்ட்டை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் தான், இந்த ஏஐ புடவை ட்ரெண்ட்டுக்கு எதிராக ரத்தன் டாடாவின் முன்னாள் மேலாளரும், பிரபல சமூக வலைத்தளப் பிரபலருமான சாந்தனு நாயுடு, தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட வீடியோவில், இந்த ஏஐ புடவை புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து கொள்வோர் இந்தியர்கள் என்பதையும், அவர்கள் அனைவரது வீட்டிலும் குறைந்தபட்சம் 15 புடவைகளாவது இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
சாந்தனு நாயுடு, நகைச்சுவையாக இந்தி கலந்த தமிழில் பேசும்போது, "நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள்.. அமெரிக்காவில் இல்லை. புடவைகளின் நாடான இந்தியாவில், உங்கள் அலமாரியில் குறைந்தபட்சம் 15 புடவைகளாவது இருக்கும். நீங்கள் எப்படி இவ்வளவு சோம்பேறித்தனமாக இருக்க முடியும்? உங்களிடம் ஏற்கனவே இருக்கும் ஒரு உடையை ஏஐ கொண்டு உருவாக்கச் சொல்கிறீர்கள்" என்று கூறியுள்ளார்.
அவர் இந்த ஏஐ புடவை ட்ரெண்ட்டை, AI-ஐப் பயன்படுத்தி தனது நாயுடன் ஒரு படத்தை உருவாக்குவதோடு ஒப்பிட்டார். "நாய் அங்கேயேதானே இருக்கிறது, அதன் அருகில் போய் ஒரு புகைப்படம் எடுக்கலாமே!" என்று கூறினார். மேலும், புடவைகளை உருவாக்குவதற்கு பதிலாக, இந்தியர்கள் பொதுவாக அணியாத வெள்ளை கவுன்களை ஏஐ-யை பயன்படுத்தி உருவாக்கினால் புரிந்துகொள்ளலாம் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை, நான் வெறும் வேடிக்கைக்காகத்தான் பேசுகிறேன் என்றும் கூறியுள்ளார். ஆனாலும், இந்த வீடியோவை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
சாந்தனு நாயுடு, புகழ்பெற்ற தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் இளைய நண்பர் மற்றும் உதவியாளர் ஆவார், மேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2014-ல் டாடா குழுமத்தில் பணிபுரியத் தொடங்கி, டாடாவின் நம்பிக்கை பெற்றவராக உயர்ந்தார். மேலும், வயதானவர்களுக்கு உதவும் நோக்கில் குட்ஃபெலோஸ் (Goodfellows) என்ற நிறுவனத்தையும் நிறுவியுள்ளார். ரத்தன் டாடாவின் கடைசிக் காலம் வரை அவருடன் இருந்தவர் சாந்தனு நாயுடு. நாய்கள் மீதான இருவருக்கும் இருந்த அன்பின் மூலம் இந்த நட்பு உருவானது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலில் வடிவமைப்புப் பொறியாளராகப் பணியாற்றி, பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார்.


Click it and Unblock the Notifications