2024 ஆம் ஆண்டு இந்திய வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறையில் பல முக்கிய பிரமுகர்கள் மறைந்தனர், இது வர்த்தக துறையில் பெரும் துயர சம்பவமாக மாறியது. ரத்தன் டாடா முதல் சஷி ருயா வரையில் பலர் 2024ஆம் ஆண்டு மறைந்தனர்.
ரத்தன் டாடா: டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா அக்டோபர் 9ஆம் தேதி மறைந்தார். இவர் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்ற போது டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு வெறும் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள குழுமமாக இருந்தது ராஜினாமா செய்த போது 77 பில்லியன் டாலராக இருந்தது. இன்று 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உள்ளது.

அவரது தலைமையின் கீழ், டாடா குழுமம் பெரிய அளவில் விரிவடைந்தது, தற்போது 26 டாடா நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு மாஸ் காட்டி வருகிறது.
நாராயணன் வாகுல்: இந்திய வங்கித் துறையில் ஒரு அடையாளமாக இருந்த நாராயணன் வாகுல், 88 வயதில் 2024 ஆம் ஆண்டு மறைந்தார். ஐசிஐசிஐ குழுமத்தை நிறுவியர்களில் முக்கியமானவராக இருந்தார். வாகுல் இந்திய வங்கியை நவீனமயமாக்குவதிலும், புதுமையான நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தார். இந்திய நிதித் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
செருகுரி ராமோஜி ராவ்: உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராமோஜி ஃபிலிம் சிட்டியின் உரிமையாளர் தான் செருகுரி ராமோஜி ராவ் 2024 ஆம் ஆண்டில் மறைந்தார். இவருடைய மறைவு இந்திய ஊடகத் துறை, குறிப்பாக டோலிவுட் துறைக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.
ராமோஜி ஃபிலிம் சிட்டி மட்டும் அல்லாமல் ராமோஜி ராவ் ஈநாடு செய்தித்தாள், ஈடிவி நெட்வொர்க் மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டி உள்ளிட்ட பல்வேறு வர்த்தகத்தை செய்து வந்தார். ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்தார்.
பிபேக் டெப்ராய்: இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் பிரதமரின் முக்கிய ஆலோசகருமான பிபேக் டெப்ராய் 2024 ஆம் ஆண்டு நவம்பரில் மறைந்தார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக, டெப்ராய் நாட்டிற்கான பல முக்கிய பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
அமியா குமார் பாக்சி: புகழ்பெற்ற பொருளாதார வரலாற்றாசிரியரும் கொல்கத்தா வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனத்தின் நிறுவனர் இயக்குநருமான அமியா குமார் பாக்சி 2024 ஆம் ஆண்டு மறைந்தார். பொருளாதாரத் துறைக்கு பாக்சி ஆற்றிய பங்களிப்பிற்காக 2005 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
சஷி ருயா: இந்தியாவின் முக்கிய தொழிலதிபரும், எஸ்சார் குழுமத்தின் இணை நிறுவனருமான சஷி ருயா 2024 ஆம் ஆண்டு மறைந்தார். சஷி ருயா தனது சகோதரர் ரவி ருயா உடன் இணைந்து, ஒரு சிறிய கட்டுமான நிறுவனத்தை உருவாக்கினார், பின்னாளில் அது உலோகம், எனர்ஜி மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்தடம் பதித்து இந்தியாவின் முக்கிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கியது.


Click it and Unblock the Notifications