டாடா சன்ஸ் தலைவராகத் தனது பதவியை ராஜினாமா செய்த பின்பு ரத்தன் டாடா அவர்கள் டாடா டிரஸ்ட் நிர்வாகத்தையும், தனது சொந்த முதலீடுகள், நன்கொடை பணிகளைச் செய்து வந்தார். 86 வயதான ரத்தன் டாடா தனது தனிமையைத் தவிர்க்க செல்லப்பிராணிகள் உடன் அதிகப்படியான நேரத்தைச் செலவிடுவது வழக்கம்.
ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் உயர் பதவியில் இருந்த வேளையிலும் தெரு நாய்களுக்குப் பல உதவிகளைச் செய்துள்ளார். இவ்வளவு ஏன் மும்பை டாடா தலைமை அலுவலகத்தில் குளிர்காலத்தில் தெருநாய்களுக்குச் சிறப்பு அறை ஒதுக்கப்படும் வழக்கம் அவருடைய நிர்வாகக் காலத்தில் இருந்தது.

இதன் நீட்சியாக ரத்தன் டாடா சமீப காலத்தில் ஒரு குட்டி பிராஜெக்ட் மீது தனது கவனத்தைத் திருப்பினார், மும்பையில் உள்ள விலங்கு மருத்துவமனை அமைக்கும் திட்டம் தான் அது. இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த விலங்கு மருத்துவமனையைத் திறக்க வேண்டும் என்பது அவரது கனவு.
இந்தக் கனவு மும்பை மகாலக்ஷ்மி பகுதியில், டாடா டிரஸ்ட்ஸ் ஸ்மால் அனிமல் ஹாஸ்பிட்டல் திறப்பு விழாவுடன் விரைவில் நனவாக உள்ளது. இந்த மருத்துவமனை மார்ச் மாத முதல் வாரத்தில் திறக்கப்படும் எனத் தெரிகிறது.
விலங்கு பிரியரான ரத்தன் டாடா, மும்பையில் சிறிய விலங்குகளுக்கான வசதி ஏன் வேண்டும் என்பது குறித்துப் பிரபல பத்திரிக்கையிடம் பேசிய போது, செல்லப்பிராணிகள் ஒரு குடும்ப உறுப்பினரிலிருந்து வேறுபட்டதல்ல என்பதை நம்புகிறேன், எனது வாழ்நாள் முழுவதும் பல செல்லப்பிராணிகளின் வளர்த்துள்ளேன், இந்த மருத்துவமனையின் அவசியம் எனக்குத் தெரியும் என்று 86 வயதான ரத்தன் டாடா கூறினார்.

The Tata Trusts Small Animal Hospital மும்பையில் சுமார் 165 கோடி ரூபாய் செலவில் ஐந்து அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் அமைய உள்ளது. இதில் 200 நோய்வாய்ப்பட்ட செல்லபிராணிகள் தங்கும் வசதி உள்ளது. இந்த மருத்துவமனைக்காக மும்பைக்கு இடம்பெயர்ந்த பிரிட்டிஷ் கால்நடை மருத்துவர் தாமஸ் ஹீத்கோட் தலைமையிலான குழு நிர்வாகம் செய்ய உள்ளது.
இந்தத் திட்டம் 2017 இல் அறிவிக்கப்பட்டபோது, மருத்துவமனை நவி மும்பையில் கட்டப்படத் திட்டமிடப்பட்டது. ஆனால் ரத்தன் டாடா நீண்ட தூர பயணம் செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு ஒரு தடையாக இருக்கும் என்பதை உணர்ந்து மும்பையில் மைய பகுதியில் மாற்ற முடிவு செய்தார்.


Click it and Unblock the Notifications